ட்ரை ஃபில்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முதல் பாகம் :

பழக்கலவை (Fruit Cocktail) - ஒரு டின்

வெஜிடபிள் (கிரிஸ்டல்)ஜெல்லி - (75 g பாக்கெட்) - ஒன்று

தண்ணீர் - 350 மில்லி

இரண்டாம் பாகம் :

கஸ்டர்டு பவுடர் - 2 மேசைக்கரண்டி

பால் - 200 மில்லி

சீனி - 3 தேக்கரண்டி

ஐஸ்க்ரீம் எசன்ஸ் அல்லது

வெனிலா எசன்ஸ் - 5 துளிகள்

மூன்றாம் பாகம் :

ஃபுல் க்ரீம் - ஒரு பாக்கெட்

சீனி - 3 மேசைக்கரண்டி

அலங்காரத்திற்கு :

(கலர்) ஸ்வீட் மணிகள் மற்றும்

சாக்லேட் பீஸ்கள் - சிறிது

செய்முறை:

முதலில் சுமார் 3/4 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு பளிங்கு கோப்பையில் பழங்களை தண்ணீர் வடித்து விட்டு பரப்பவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து ஜெல்லியை கொட்டி நன்றாக கரையும் வரை கலக்கி, பிறகு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய பிறகு, ஆனால் உறையும் பதம் வரும் முன் பரப்பி வைத்துள்ள பழங்களின் மீது ஊற்றவும்.

கஸ்டர்டு பவுடரை சிறிது பால் விட்டு கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மீதி பாலில் 3 தேக்கரண்டி சீனியும் 5 துளி எசன்ஸும் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைத்து வைத்துள்ள கஸ்டர்டு பவுடரை ஊற்றவும்.

உடனே அடுப்பை அணைத்துவிட்டு கட்டி விழுந்து விடாமல் நன்கு கலக்கவும்.

சற்று ஆறியவுடன் பழத்தின் மேல் ஊற்றி வைத்துள்ள ஜெல்லி உறைந்த பிறகு அதன் மேல் ஊற்றவும்.

ஃபுல் க்ரீமை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்கொண்டு, அதனுடன் 3 மேசைக்கரண்டி சீனி சேர்த்து முட்டை கலக்கும் மெஷினால் நன்கு கலக்கவும்.

க்ரீம் நன்கு திக்காகி வரும்போது மெஷினை நிறுத்திவிடவும். மேலும் தொடர்ந்தால் தண்ணீர் போல் தெளிந்துவிடக்கூடும்.

திக்காகிய க்ரீமை கஸ்டர்டு மேல் குவிந்தாற்போல் வைக்கவும். பிறகு அதன் மேல் ஸ்வீட் மணிகள் மற்றும் சாக்லேட் பீஸ்களை தூவி அலங்கரிக்கவும்.

சுமார் ஒரு மணி நேரமாவது ஃபிரிட்ஜில் வைத்து பிறகு பரிமாறலாம். இது விருந்தாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் செய்து கொடுப்பதற்கேற்ற ஒரு அருமையான டெஸர்ட்.

குறிப்புகள்:

1.பழங்களை டின்னில் இல்லாமல் தனித்தனியாகவும் வாங்கி சிறிய துண்டங்களாக கட் பண்ணி செய்யலாம். 2. ஒரே கோப்பையில் செய்யாமல் ஒரு நபருக்கு ஒரு கப் கொடுப்பது போன்று தனித்தனி சிறிய கோப்பைகளில் பிரித்தும் செய்யலாம். 3. திக்கான க்ரீம், ஸ்ப்ரே பண்ணுவதுபோல் ரெடிமேடாகவும் கடைகளில் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் அதில் இனிப்பு சுவை சற்று கம்மியாக இருக்கும். 4. இது செட் ஆனபிறகு மேலிருந்து கீழாக வெட்டி சாப்பிடவும். ஏனெனில், அப்போதுதான் மேலேயுள்ள க்ரீம், அதற்கு கீழேயுள்ள கஸ்டர்டு, அதன் கீழுள்ள பழங்கள் என்று ஒரே சமயத்தில் பல சுவைகளோடு சாப்பிடலாம்.