சோயா மீற் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயா மீற் - 1 1/2 கப்

(சோயா உருண்டை/மீல் மேக்கர்)

புளி - சிறிய பாக்களவு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை

உப்பு

அரைக்க:

=========

பெரிய சீரகம் (சோம்பு) - 1 மேசைக்கரண்டி

சிறிய சீரகம் - 1 மேசைக்கரண்டி

மல்லி - 1 மேசைக்கரண்டி

செத்தல் மிளகாய் - 1/4 கப்

கறுவா(பட்டை) - 1 " துண்டு

கராம்பு(கிராம்பு) - 3

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

தாளிக்க:

=========

பெரிய சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1/2 கப்

உள்ளி - 5 பல்லு

கறிவேப்பிலை - 1 நெட்டு

செய்முறை:

சோயா மீற்றை சுடு தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

அரைப்பதற்கு கொடுத்த பொருட்களை கிரண்டரில் போட்டு மாவாக அரைத்து வைக்கவும்.(மசாலா)

உள்ளியை நசித்து வைக்கவும்.

புளியை கரைத்து வைக்கவும்.

ஊறவைத்த சோயா உருண்டைகளை பிழிந்து எடுக்கவும். (பெரிதாக இருப்பின் சிறிய துண்டுகளாக வெட்டவும்)

எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெரிய சீரகம், கறிவேப்பிலை, நசித்த உள்ளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதனுள் சோயா மீற்றைப் போட்டு 2 நிமிடங்கள் மேலும் வதக்கவும்.

பின்னர் 1 1/2 கப் தண்ணீர், அரைத்த மசாலா கலவை, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கறி, தண்ணீர் வற்றி நன்கு தடிப்பாக வந்ததும் இறக்கவும்.

சோயா மீற் கறி தயார். இதனை பரிமாறும் கிண்ணத்தில் போட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சோறு, ரொட்டி, பரதா, சப்பாத்தி எல்லாவற்றுடனும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

இலங்கையில் தண்ணீருக்கு பதிலாக தேங்காய்ப்பால் (முதல் பால் 1/4 கப், இரண்டாம், மூன்றாம் பால் 1 கப்) சேர்ப்பார்கள். இரண்டாம், மூன்றாம் பாலில் அவிய விட்டு கறி வற்றியதும் இறக்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் முதல் பால் சேர்க்க வேண்டும்.விரும்பினால் ஒரு உருளைக்கிழங்கையும் சிறிதாக வெட்டிச் சேர்த்து சமைக்கலாம். சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு சேர்க்கும் போது புளிக்கரைசலைத் தவிர்த்து சமைத்து விட்டு கறியை இறக்கியதும் பாதி தேசிக்காயை சாறு பிழிந்து விடவும்.