சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன் (1)
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 1
சோயாசாஸ் - 1/2 கப்
வினிகர் - 1/4 கப்
நல்லமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மைதாமாவு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 நீளத்துண்டு
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை மிகப்பொடியதாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழித்துண்டுகளைப் போட்டு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், நல்லமிளகுத்தூள், மஞ்சள்தூள், சோயாசாஸ், வினிகர், அஜினோமோட்டோ, நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்துள்ள கோழித்துண்டு கலவையை 1 மணி நேரம் கழித்து அப்படியே எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 1 விசில் விட்டு அரைவேக்காடு வேகவைத்து குக்கரை இறக்கவும்.
பின்னர் கார்ன்ஃப்ளார்மாவு, மைதாமாவு இவற்றை ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் விட்டு கட்டிதட்டாமல் கரைத்து வைக்கவும்.
வாணலியில் பொரிக்கத்தேவையான அளவு எண்ணெய் விட்டு அது காய்ந்ததும். குக்கரில் இருந்து கோழித்துண்டுகளை மட்டும் எடுத்து கரைத்துவைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் இரண்டிரண்டாக போட்டு நன்றாக பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிவக்க வறுக்கவும்.
அதில் பொரித்தெடுத்த கோழித்துண்டுகளை போட்டு பிரட்டி விட்டு, குக்கரில் மீதியுள்ள கிரேவியும் ஊற்றி எண்ணெய் தெளிந்து வரும் போது இறக்கவும்.
பரோட்டா, சப்பாத்தி இவற்றுடன் சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.