சீஸ் சோசேஜ் சலாட்
தேவையான பொருட்கள்:
துளையுள்ள சுவிஸ் சீஸ் - 250கிராம்
கௌடா சீஸ் - 300 கிராம்
கோழி சோசேஜ் - 250 கிராம்
லீக்ஸ் - 150 கிராம்
காரட் - 100 கிராம்
கோன் சலாட் - 150 கிராம்
வினிகர் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
சீனி (சர்க்கரை) - தேவையானளவு
எண்ணெய் - 4 மேசைகரண்டி
செய்முறை:
இரு சீஸ்களையும் ஒரு சென்டிமீட்டர் அளவு சிறிய சதுர துண்டுகளாக வெட்டவும். கோழி சோசேஜை மெல்லிய வட்ட துண்டுகளாக வெட்டவும்.
லீக்ஸின் தேவையற்ற பகுதிகளை அகற்றிய பின்பு நன்றாக கழுவவும். கழுவிய லீக்ஸை ஓரளவு சிறிய (2செ.மீ - 4 செ.மீ) துண்டுகளாக வெட்டவும். கோன் சலாட் இலையை நன்றாக கழுவவும்.
காரட்டின் தோலை சீவியபின்பு கழுவி துருவவும். ஒரு பாத்திரத்தில் உப்பு, மிளகுத்தூள், வினிகர், சீனி(சர்க்கரை) ஆகியவற்றை நன்றாக கலக்கவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதனை சிறிது நேரம் நன்றாக அடிக்கவும்.
அடித்த எண்ணெயை உப்பு, மிளகுத்தூள், வினிகர், சீனி(சர்க்கரை) உள்ள பாத்திரத்தில் விட்டு நன்றாக அடித்து எல்லாவற்றையும் கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சீறிய சதுர சீஸ்துண்டுகள், மெல்லிய வட்ட கோழி சோசேஜ் துண்டுகள், லீக்ஸ் துண்டுகள், கேரட் துருவல், கோன் சலாட் இலைகள் ஆகியவற்றை அதில் போடவும்.
அதன் மேல் அடித்து வைத்துள்ள கலவையை (உப்பு, மிளகுத்தூள், சீனி(சர்க்கரை), வினிகர், எண்ணெய்) ஊற்றி நன்றாக கலக்கவும். அதன் பின்பு அதனை 5 நிமிடங்கள் ஊற விடவும்.
அது ஊறிய பின்பு சுவையான சீஸ் சோசேஜஸ் சலாட் தயாராகி விடும். இதனை பாண், பட்டருடன் அல்லது சோற்றுடன் சாப்பிடலாம்.
குறிப்புகள்:
சுவையானதும் கொழுப்பு, புரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஆகிய சத்துகள் நிறைந்ததும் ஜெர்மனிய மக்கள் மிக மிக விரும்பி சாப்பிடுகிற சலாட் சீஸ் சோசேஜ் சலாட் ஆகும். எச்சரிக்கை - இருதயநோயாளர், சீஸ், கோழி அலர்ஜியுடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - துளையுள்ள சுவிஸ் சீஸ் பதிலாக வேறு ஏதாவது துளையுள்ள சீஸ் பாவிக்கலாம். கௌடா சீஸ் பதிலாக வேறு ஏதாவது கட்டி சீஸ் பாவிக்கலாம் கோழி சோசேஜ் பதிலாக வேறு ஏதாவது சோசேஜ் பாவிக்கலாம் கோன் சலாட் பதிலாக வேறு ஏதாவது சலாட் பாவிக்கலாம், விரும்பினால் காரட் சேர்க்கலாம். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - 5 நிமிடங்கள் ஊற விடவும்.