சய்யோ (சைனீஸ் ரோல்ஸ்)
தேவையான பொருட்கள்:
ரைஸ் பேப்பர்(18 c ) - 500 கிராம்
வெர்மிசெல்லி சோயா - 100 கிராம்
முளைகட்டிய பச்சை பயறு - 300 கிராம்
கேரட் - ஒரு கிலோ
கருப்பு காளான் - 25 கிராம்
வெங்காயம் - 1 1/2
முட்டை - 3
ஃபிஷ் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
கோழி(அ)மாட்டு இறைச்சி(அ) இறால், நண்டு சதை - 300 கிராம்
சன் ஃப்ளவர் ஆயில் - ஒரு லிட்டர்
செய்முறை:
முதலில் இறைச்சியை கழுவி எலும்பு நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெர்மிசெல்லி சோயாவை சுடுத் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி 2 இன்ச் நீலத்திற்கு கத்திரி கோலால் வெட்டிக்கொள்ளவும்.(இந்த வெர்மிசெல்லி நரம்பைபோல் இருக்கும்)
கருப்பு காளானையும் 10 நிமிடம் சுடுநீரில் போட்டு நீரை பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும்.
கேரட்டைக் கழுவி தோல் நீக்கி துருவி அதில் உள்ள நீரை பிழிந்து கொள்ளவும்.(கேரட் ஜூஸை வீணாக்காமல் ஜுஸாக அருந்தலாம்)
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், முளைவிட்ட பயரை கழுவி நீரை வடிகட்டவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கேரட், வெங்காயம், வெர்மிசெல்லி, காளான், இறைச்சி, மிளகுத்தூள், ஃபிஷ் சாஸ்(தயார் செய்யப்படாத ஃபிஷ் சாஸ்), அஜினோமோட்டோ, இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
மேலும் உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும், ஒரு தூய்மையான துணியை தண்ணீரில் நனைத்து விரித்து வைக்கவும்.
பின்பு வாயகன்ற பாத்திரத்தில் 3/4 பாகம் நீர்விட்டு கொதிக்க விடவும். நீர் கொதி வரும் போது ரைஸ் பேப்பர் ஒன்றை எடுத்து இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு பாதி அளவு நீரில் நனையும் படி பிடிக்கவும்.
30 நொடிக்கு பின்பு இன்னொரு புறமும் விட்டு துணியில் மேல் விரித்து வைக்கவும்.
பின்பு கலந்து வைத்துள்ள பூரணத்தை கைகளால் பிடித்து நீளவாக்கில் நடுவில் வைத்து இரண்டு புறமும் மடித்து உருட்டவும். இப்படியே அனைத்தையும் உருட்டிக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு செய்து வைத்த ரோல்களை அதில் போடவும். பாத்திரத்தின் அளவை பொருத்து ரோல்களை போடலாம். மிதமான தீயில் அனைத்தையும் பொரித்து எடுக்கவும்.
இதுவே சய்யோ இதை சாப்பிடும் முறை சாலட் இலைகளை கழுவி வைக்கவும். புதினா, மல்லி இலைகளை கழுவி கிள்ளி வைக்கவும்.
ஒரு சாலட் இலையில் மல்லி இலை, புதினா இலை நடுவே சைனீஸ் ரோலை வைத்து சலாட் இலையை சுருட்டிக் கொள்ளவும்.
இதற்கு தயார் செய்யப்பட்ட ஃபிஷ் சாஸை தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். (ஃபிஷ் சாஸ் செய்முறை எனது குறிப்பில் வெளியாகியுள்ளது)
குறிப்புகள்:
இந்த சைனீஸ் ரோல் அனைவரும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி, ஃப்ரெஞ்சில் இதன் பெயர் நேம் வெளிநாட்டவர்கள் அநேகமானவர்களால் அறிந்த ஒன்று.