கேரட் பீட்ரூட் உருளை சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
சாண்ட்விச் பாண் துண்டுகள் - 12
கேரட் (துருவியது) - 100 கிராம்
உருளைக்கிழங்கு (அவித்து மசித்தது) - 200 கிராம்
பீட்ரூட் (துருவியது) - 100 கிராம்
சீஸ்(துருவியது) - தேவையானளவு
உப்புத்தூள் - தேவையானளவு
மிளகுத்தூள் - தேவையானளவு
பட்டர் - 100 கிராம்
பச்சை கலரிங் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட்டை ஓரளவு பிழிந்து அதில் பட்டர் (ஒரு தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும்.
இன்னொரு பாத்திரத்தில் துருவிய கேரட்டை ஓரளவு பிழிந்து அதில் பட்டர் (ஒரு தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும்.
அவித்து மசித்த உருளைக்கிழங்கை இடியப்ப உரலில் போட்டு ஓரளவு பிழிந்து அதில் பட்டர் பச்சை கலரிங் (ஒரு தேக்கரண்டி), உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து ஓரளவு பிரட்டவும்.
மிகுதியான பட்டரை ஒவ்வொரு பாண்துண்டுகளின் ஒரு பக்கத்திற்கு மட்டும் பூசவும்.
அதன் பின்பு பட்டர் பூசிய பாண் துண்டுகளில் 6 ஜ எடுத்து அதில் ஒவ்வொன்றிற்கும் கேரட் கலவையை வைக்கவும். பின்பு உருளைக்கிழங்கு கலவையை வைக்கவும்.
அதில் பீட்ரூட் கலவையை வைக்கவும். பின்பு துருவிய சீஸ் வைக்கவும்.
அதன் பின்பு மற்றைய பாண் துண்டினால் மூடி சாதுவாக அழுத்தி கொள்ளவும்.
இப்படியே 6 பாண் துண்டுகளுக்கும் செய்யவும்.
பின்பு அதை ஒரு மணித்தியாலம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்பு அதை எடுத்து மூலைக் குறுக்காக வெட்டி பரிமாறவும்.
குறிப்புகள்:
1)உருளைக்கிழங்கு - கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், உயிர்சத்து A,B1,B2,B3,B6,C,D, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீஸியம், சோடியம், கால்சியம் அத்துடன் நார்சத்தும் நிறைந்த ஒர் உணவு பொருள். (2)கேரட் - கார்போஹைட்ரேட், கொழுப்பு, கேரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,B2,B3,B6,C,D, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீஸியம், சோடியம், கால்சியம் ஆகியவை நிறைந்த ஒர் உணவு பொருள். (3)பீட்ரூட் - கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,B2,B3,B5,B6, B9,C, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீஸியம், சோடியம், கால்சியம் ஆகியவை நிறைந்த ஒர் உணவுப்பொருள். ஆகவே உருளைக்கிழங்கும், கேரட்டும், பீட்ரூட்டும் ஒன்றாக சேரும் போது கிடைக்கும் உணவு சத்துக்கள் யாவும் மூன்று மடங்காகவே கிடைக்கும். ஆகவே இவை மூன்றும் சேர்த்து செய்யப்பட்ட உணவான கேரட் பீட்ரூட் உருளை சாண்ட்விச்சில் மேலே குறிப்பிடப்பட்ட சகல சத்துக்களும் மூன்று மடங்காகவே கிடைக்கின்றன. அத்துடன் நல்ல சுவையும் கிடைக்கும். ஆகவே இதில் அடங்கும் சத்துக்களை பெற இந்த சாண்விச்சை செய்து சாப்பிடவும். (A)கவனிக்க வேண்டிய விஷயங்கள்- 1)அவித்து மசித்த கேரட், அவித்து மசித்த உருளைக்கிழங்கு இவையிரண்டையும் சேர்த்து குழைக்கவும். (2) ஒரு மணித்தியாலம் குளிர்சாதனபெட்டியில் வைக்கவும். அதை மூலைக்குறுக்காக வெட்டி பரிமாறவும். (B)மாற்று முறை- பட்டர்ருக்கு பதிலாக மாஜரீனை பாவிக்கவும். (C)எச்சரிக்கை -இருதய,சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்