கூவை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப் சீனி - ஒன்றரை கப் தேங்காய் பால் - 400 மில்லி சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி ஃபுட் கலர் - ரோஸ் மற்றும் ஊதா (அ) விரும்பிய 2 நிறங்களில் தண்ணீர் - ஒன்றரை கப் + முக்கால் கப் பான்டன் இலை - சிறிது
செய்முறை:
சீனியில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பான்டன் இலை மற்றும் சோம்புத் தூள் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகை அதிகமாக கொதிக்கவிட வேண்டாம். 3 முறை கொதித்தால் போதுமானது.
அரிசியைக் களைந்து 4 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அரிசி ஊறியதும் மிக்ஸியில் போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும். அதனுடன் தேங்காய் பால்
வடிகட்டிய சீனிபாகு சேர்த்து கரைக்கவும். மாவு கரைக்கும் போது நீர்க்கவுமில்லாமல்
கெட்டியாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்க வேண்டும். பிறகு ஒரு முறை மாவை வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரே அளவுள்ள மூன்று கோப்பைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு கோப்பையில் கலந்துள்ள மாவில் மூன்றில் ஒரு பங்கை ஊற்றவும். மீதமுள்ள மாவில் ஒரு பங்கில் ரோஸ் கலரும்
மற்றொரு பங்கில் ஊதா கலரும் கலந்து தனித்தனி கோப்பைகளில் ஊற்றிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கலவடையை வைத்து
அதில் மாவுக் கலவையை வேகவைக்க ஒரு பாத்திரத்தை வைக்கவும். பாத்திரத்தின் மூடியில் துணியைக் கட்டிக் கொள்ளவும். பிறகு மாவுக் கலவைக்காக வைத்த பாத்திரத்தில் 2 குழிக்கரண்டி அளவு ரோஸ் கலர் மாவை ஊற்றி மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். இதேபோல் மேலும் இரண்டு முறை ரோஸ் கலர் மாவை ஊற்றி தலா 5 நிமிடங்கள் வேகவிடவும். (இப்படிச் செய்வதால் மாவு வெந்த பின் துண்டுகள் போடச் சுலபமாக இருக்கும். மேலும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் தனித்தனி லேயர்களாகவும் இருக்கும்).
ரோஸ் கலர் வெந்ததும் அதன் மீது 2 குழிக்கரண்டி அளவு வெள்ளை கலர் மாவை ஊற்றி 5 நிமிடங்கள் வேகவிடவும். (ரோஸ் கலரை வேக வைத்தது போல மூன்று லேயர்களாக ஊற்றி தலா 5 நிமிடங்கள் வேகவிடவும்).
கடைசியாக ஊதா கலர் மாவையும் இதே போல் மூன்று லேயர்களாக ஊற்றி வேகவிடவும். நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு மணி நேரம் ஆறவிடவும். ஆறியதும் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுக்கவும்.
சுவையான கூவை தயார். விரும்பிய வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.