குவாகுவா
தேவையான பொருட்கள்:
கோதுமை மா(மைதாமா) - 500 கிராம்
ஆப்பச்சோடா - (1/4 - 1/2) தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1/2 போத்தல்
நறுக்கிய செத்தல்(காய்ந்த)மிளகாய் - (2 - 4)
நறுக்கிய வெங்காயம்(பெரியது) - 2
கடுகு - சிறிதளவு
பெருஞ்சீரகம்(சோம்பு) - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
எண்ணெய் கொதித்த பின்பு அதில் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
கடுகு வெடித்த பின்பு அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய செத்தல்(காய்ந்த)மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு தாளித்தவற்றை எடுத்து ஒரு தட்டில் போட்டு வைக்கவும்.
பின்பு அடுப்பில் உள்ள தாட்சியை(வாணலியை) இறக்கி வைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமைமா(மைதாமா) ஆப்பச்சோடா, உப்பு, தாளித்தவை, மஞ்சள் தூள், தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக குழைக்கவும்(ஓரளவு தண்ணீர் பதத்தில்).
குழைத்தவற்றை (2- 5)நிமிடங்கள் மூடி வைக்கவும். (2- 5)நிமிடங்கள் மூடி வைத்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து சூடாக்கி அதில் தேங்காய் எண்ணெயை விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
எண்ணெய் கொதித்த பின்பு ஒரு சிறிய கரண்டியால் குழைத்தவற்றில் சிறிதளவு எடுத்து அதனை கொதித்த எண்ணெயில் போடவும்.
கொதித்த எண்ணெயில் போட்ட மாக்கலவை ஊதி(உப்பி)காணப்படும்.
எண்ணெயில் போட்ட மாக்கலவை முழுவதையும் பொன்னிறமாக பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரிந்த பின்பு அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
இப்படியே குழைத்தமா முழுவதையும் போட்டு பொன்னிறமாக பொரித்து அதனை பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
அதன் பின்பு சுவையான குவாகுவா தயாராகி விடும். குவாகுவா தயாராகிய பின்பு ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
மலேசிய நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் பலர் விரும்பி உண்ணும் சிற்றுண்டி குவாகுவா ஆகும். அத்துடன் இதை இலகுவாக தயாரிக்கலாம். இது ஒரளவு உப்பு சுவையும் ஒரளவு, உறைப்பு சுவையும் கலந்து காணப்படும்.
மாற்று முறை - தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக மரக்கறி எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் பாவிக்கலாம். செத்தல்(காய்ந்த)மிளகாய்க்கு பதிலாக பச்சைமிளகாய் பாவிக்கலாம்.