குறிஞ்சா இலை சுண்டல் (வறை)
தேவையான பொருட்கள்:
குறிஞ்சா இலை - ஒரு கட்டு (250-300 கிராம்)
(கட்டு கட்டாகத்தான் கடைகளில் கிடைக்கும்)
தேங்காய்ப் பூ - 3 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
செத்தல் மிளகாய் - 3
சின்ன வெங்காயம் சிறிதாக அரிந்தது - 2 மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
குறிஞ்சா இலையைக் கழுவக்கூடாது. கழுவினால் கைப்பு அதிகமாகும். அதனால் ஒரு ஈரத் துணியால் துடைக்கவும். பின் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அப்படியே உருட்டி எடுத்து, தலை முடிபோல் மெல்லியதாக அரியவும்.
இதனுள் தேங்காய்ப்பூ, உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, செத்தலை 2/3 ஆக நறுக்கிப் போட்டு, வெங்காயமும் சேர்த்து தாளிக்கவும். வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
பின் அதனுள் இந்த, பிரட்டியுள்ள இலையை கொட்டி ஒரு நிமிடம் பிரட்டி உடனேயே இறக்கவும். அதிகம் வதங்கத் தேவையில்லை.
குறிப்புகள்:
இந்த குறிஞ்சா இலை நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்த ஒரு கை மருந்து. மிளகாய் போடாமல் செய்து குழந்தைகளுக்கு, சோறுடன் ஒரு பிடி பிசைந்து ஊட்டினாலே, வயிற்றிலுள்ள பூச்சி அழிந்துவிடும்.
முட்டையை விரும்பாதவர்கள் சேர்க்காமல் விடலாம். அல்லது முள் நீக்கிய மீன் ஒரு துண்டை அவித்து, பின் முட்டைக்குப் பதில் சேர்க்கலாம். தனி சைவமாகவும் சுண்டல் செய்யலாம். முட்டை சேர்ப்பது, இந்த இலையிலுள்ள கைப்புத் தன்மையைக் குறைக்கவே. உப்பு கூடினாலும், இலையின் கைப்பு அதிகமாகும்.