உருளை லசான்யா
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 பெரியது
தக்காளி ஸோஸ் - 1 கப்
பார்மஜான் சீஸ் - 1/4 கப்
பிரெட் தூள் - 1/4 கப்
மொற்ஸரில்லா சீஸ் - 1/4 கப்
உப்பு
மைதா மா - 3 மேசைக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
பேசில்/ஒரெகானோ - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி மெல்லிய நீள் வட்டமான துண்டுகளாக நீளவாக்கில் வெட்டவும்.
பார்மஜான் சீஸ் பிரெட் தூளை கலந்து வைக்கவும்.
மைதாமாவினுள் உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
ஒரு பானில் ஒலிவ் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
வெட்டிய உருளைத்துண்டுகளை மைதா கரைசலில் தோய்த்து சீஸ்-பிரெட் தூள் கலவையில் பிரட்டி எண்ணெயில் இரு பக்கமும் திருப்பி போட்டு சோட்டே செய்யவும். (4 - 5 நிமிடங்களுக்கு)
பின்னர் ஒரு பேக்கிங் பானில் அல்லது சிறிது தட்டையான கிண்ணத்தில் தக்காளி ஸோஸை ஊற்றி பரப்பவும்.
அதன் மேல் பொரித்த உருளைத்துண்டுகளை அடுக்கவும்.
பின்னர் அதன் மேல் மீதி சீஸ்-பிரெட் தூள் கலவையை தூவவும்.
பின்னர் அதன் மேல் பேசில்/ஒரெகானோ , மொற்ஸரில்லா சீஸை தூவி சிறிது உப்பும் தூவி 350 Fஇல் 15 - 20 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகி பொங்கும் வரை வைத்து எடுக்கவும்.
சுவையான உருளை லசான்யா தயார். இதனை மாலை அல்லது இரவு உணவாக சாப்பிடலாம்.
குறிப்புகள்:
இதற்கு பேக் செய்வதற்கு பயன்படுத்தும் உருளைக்கிழங்கை பாவிக்கவும். அது இல்லாவிட்டால் சாதாரண உருளையும் பாவிக்கலாம்.