இஞ்சி மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
மாங்காய் இஞ்சி - 50 கிராம்
மாங்காய் (சிறியது) - ஒன்று
பச்சைமிளகாய்(நறுக்கியது) - 8
உப்பு -தேவையான அளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு (விரும்பினால்)
செய்முறை:
மாங்காய் இஞ்சியின் தேவையற்ற பகுதிகளை அகற்றவும். பின்பு மாங்காய் இஞ்சியின் தோலை சீவவும்.
தோலை சீவிய மாங்காய்இஞ்சியினை சிறிய சிறிய துண்டுகளாக(பொடி பொடியாக) நறுக்கவும்.
சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய மாங்காய் இஞ்சியை ஈரமற்ற ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதன் பின்பு மாங்காயை நன்றாக கழுவவும். கழுவிய மாங்காயை ஈரமில்லாதவாறு துணியினால் நன்றாக துடைக்கவும்.
ஈரமில்லாமல் துடைத்தபின்பு மாங்காயில் உள்ள தேவையற்ற பகுதிகளை அகற்றவும்.
தேவையற்ற பகுதிகளை அகற்றிய மாங்காயை சிறிய சிறிய(பொடி பொடியாக)துண்டுகளாக நறுக்கவும்.
பின்பு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய மாங்காய், மாங்காய்இஞ்சி, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும் . நன்றாக கலந்த பின்பு கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்யவும்.
சுத்தம் செய்த கறிவேப்பிலையை ஒரு துணியினால் அல்லது ஈரம் உறிஞ்சக்கூடிய ஒரு தாளினால் ஈரமில்லாமல் துடைக்கவும். ஈரமில்லாமல் துடைத்த கறிவேப்பிலையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதனை சூடாக்கவும். சூடாக்கிய பின்பு அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு தாளித்தவற்றை எடுத்து முதலில் கலந்து வைத்திருக்கும் பொருட்களுடன் போடவும்.
பின்பு மரக்கரண்டியால் எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு புது விதமான சுவையான மாங்காய் இஞ்சி மாங்காய் ஊறுகாய் தயாராகிவிடும்.
சூடு ஆறியபின்பு சுத்தமான போத்தலில் போட்டு காற்று, தண்ணீர் போன்றவை உட்புகாதவாறு போத்தலின் மூடியை இறுகமூடி வைத்து உண்ணலாம் .
குறிப்புகள்:
மாங்காய் இஞ்சியில் கொழுப்பு, புரதம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தாதுக்கள், மெக்னீஸியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் C ஆகியசத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன் மாங்காய் இஞ்சி முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது மருத்துவமூலிகையும் ஆகும். மாங்காய் இஞ்சியை உண்பதால் தீரும்நோய்கள் - பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல், தொண்டைக்கம்மல் ஆகும். இப்படிப்பட்ட மாங்காய் இஞ்சியுடன் பலவித சத்துகள் நிறைந்த மாங்காயையும் சேர்த்து செய்யப்பட்ட ஊறுகாய் சுவையானதும் சத்துகள் நிறைந்ததும் புது விதமானதுமாகும். அத்துடன் இது நல்ல ஜீரணத்தை தரக்கூடியது ஆகவே மாங்காய்இஞ்சி மாங்காய்ஊறுகாய் செய்து சாப்பிட்டு இதன் பலனை அறியவும். எச்சரிக்கை மாங்காய் இஞ்சிஅலர்ஜி உள்ளவர்கள், இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும், மாங்காய் இஞ்சி ஊறுகாய் சாப்பிட விரும்பினால் மரவள்ளிக்கிழங்கை உண்ணகூடாது. (மாங்காய்இஞ்சியும், மரவள்ளிகிழங்கும் சேர்ந்தால் நஞ்சாகிவிடும்). கவனிக்க வேண்டிய விசயங்கள்- மாங்காய் இஞ்சி போட்டு வைத்திருக்கும் போத்தலில் ஈரம்உட்புகாதவாறு கவனமாக பாவித்தால் நீண்ட நாட்களுக்கு வைத்து பாவிக்கலாம். அத்துடன் மாங்காய் இஞ்சியை செய்யும் போதும் சுத்தமாகவும் ஈரம்பாடாமலும் கவனமாகவும் செய்யவும். மாங்காய் இஞ்சிக்கு பதிலாக கறிக்கு பயன்படும் இஞ்சியை பயன்படுத்தலாம் பச்சைமிளகாய்க்கு பதிலாக செத்தல்மிளகாய்(காய்ந்தமிளகாய்) பயன்படுத்தலாம்.