இஞ்சி அல்வா
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 200 கிராம்
சீனி(சர்க்கரை) - அரை கிலோ
தண்ணீர் - 4 கப்
பட்டர் (உருக்கியது) - (3 - 4) மேசைக்கரண்டி
கயூ (முந்திரிகைபருப்பு (இரண்டாக்கியது) - 50 கிராம்
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். வெட்டிய இஞ்சி, 4 கப் தண்ணீர் ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு விழுதாக அரைக்கவும்.
விழுதாக அரைத்த இஞ்சியை ஓரளவான துணியில் போட்டு நன்றாக பிழிந்து வடித்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சீனி(சர்க்கரை), வடித்த இஞ்சி சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
இவையிரண்டும் நன்றாக கொதித்ததும் அதில் இரண்டு மேசைக்கரண்டி பட்டரை போட்டு நன்றாக கிளறவும். அதன் பின்பு இன்னும் கொஞ்சம் பட்டரை எடுத்து அதை ஒரு தட்டின் எல்லா பக்கத்திற்கும் நன்றாக தடவி வைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் உள்ள பாத்திரத்தில் செய்த கலவை அல்வா பதத்திற்கு வந்ததும் அக்கலவை யுள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
இறக்கிய பாத்திரத்திலுள்ள கலவையை பட்டர் பூசிய தட்டில் ஊற்றி அதன் எல்லா பக்கங்களுக்கும் பரப்பவும் (1 CM தடிப்பு). பின்பு இக்கலவையை ஆற விடவும்.
இக்கலவை ஓரளவு ஆறியதும் இக்கலவையை ஒரளவு பெரிய நீள்சதுர துண்டுகளாக கீறிவெட்டிக் கொள்ளவும். அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து அதில் மிகுதியாக உள்ள பட்டரை போட்டு சூடாக்கவும்.
சூடாக்கிய பட்டரில் இரண்டாக உடைத்த கயூ துண்டுகளை போட்டு ஓரளவு பொரிக்கவும். பொரித்த பின்பு அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அதன் பின்பு கீறிவெட்டிய ஒவ்வொரு இஞ்சி அல்வா துண்டுகளின் மேற்பகுதியின் நடுவில் ஒவ்வொரு பாதி கயூகளையும்(முந்திரிய பருப்புகளையும்) அமர்த்தி வைத்து அலங்கரிக்கவும்.
அலங்கரித்த பின்பு இஞ்சி அல்வா துண்டுகளை நன்றாக ஆறவிடவும். ஆறிய பின்பு சுவையான சத்தான மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்வா தயாராகி விடும். அதன் பின்பு ஒரு தட்டில் இதை வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இஞ்சியில் கொழுப்பு, புரதம், தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீஸியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் C ஆகிய சத்துகள் அடங்கியுள்ளது. அத்துடன் இஞ்சி முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சியை உண்பதால் தீரும் நோய்களாவன - பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல், தொண்டைக்கம்மல் ஆகும். இப்படிப்பட்ட இஞ்சியில் செய்யப்பட்ட அல்வா சுவையானதும் சத்துகள் நிறைந்ததுமாகும் அத்துடன் இது நல்ல ஜீரணத்தை தரக்கூடியது ஆகவே இஞ்சி அல்வாவை செய்து சாப்பிட்டு இதன் பலனை அறியவும். எச்சரிக்கை இஞ்சி அலர்ஜி உள்ளவர்கள், இருதயநோயாளர், சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். இஞ்சி அல்வாவை சாப்பிட விரும்பினால் மரவள்ளிக்கிழங்கை உண்ணகூடாது(இஞ்சியும் மரவள்ளிகிழங்கும் சேர்ந்தால் நஞ்சாகிவிடும்). மாற்று முறை - பட்டர்ருக்கு பதிலாக நெய் அல்லது மாஜரீனை பாவிக்கலாம், விரும்பினால் கயூகளையும்(முந்திரியபருப்புகளையும்) அமர்த்தி வைத்து அலங்கரிக்கவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - இஞ்சி விழுதை துணியில் போட்டு நன்றாக பிழிந்து வடித்து கொள்ளவும்.