அப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை அரிசி - ஒரு கப்

தேங்காய் - அரை மூடி

பாண் துண்டுகள் - 4

சீனி (சர்க்கரை) - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையானளவு

முட்டை - ஒன்று (விரும்பினால்)

ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளை அரிசியை 3 மணிநேரம் நீரில் ஊறவிடவும். பாண் துண்டுகளை தேங்காய்நீரில் 3 மணித்தியாலம் ஊறவிடவும். பின்பு தேங்காய்யை துருவவும்.

3 மணித்தியாலத்தின் பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு அரிசி, சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு பாண்துண்டு, இப்படி மாறி மாறி போடவும் (கிரைண்டர் கப்பின் முக்கால் பகுதிக்கு) பின்பு சீனியை போடவும் .

அதன் பின்பு தண்ணீர் விட்டு அப்ப பதத்திற்கு (ஓரளவு நறுவலாக) அரைக்கவும்.

இப்படி எல்லாவற்றையும் அரைக்கவும்.

அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட் சேர்த்து 4 மணித்தியாலம் புளிக்கவிடவும்.

புளித்த அப்பமாவில் உப்பு போடவும்.

விரும்பினால் முட்டைபோட்டு கலக்கவும். அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட குழியான தாச்சி(அப்பத்தாச்சி) வைத்து சூடாக்கவும்.

அப்பதாட்சி உட்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணெய் தடவவும்.

அதில் ஒரு ஒரளவு குழியான கரண்டி அப்பமாவை ஊற்றி தாச்சியை நன்றாக சுற்றவும் (அரைவட்டமாகவும் எல்லாபக்கமும் மா ஒட்டி பிடிக்ககூடியதாகவும் தடிப்பு குறைந்ததாகவும் ).

அப்பதாட்சியை அடுப்பில் வைத்து மூடி வைக்கவும். அப்பம் நன்றாக சுட்டதும்(வெந்ததும்) தாட்சியில் இருந்து கலற்றி (தாளை விரித்து அல்லது முறத்தில்(சுளகில்))வைக்கவும்.

இப்படி எல்லா அப்பத்தையும் செய்து மிளகு குழம்புடன் அல்லது உறைப்பு கறியுடன் பரிமாறவும்.

விரும்பினால் அப்பம் வேகும் போது முட்டையை உடைத்து ஊற்றி சிறிது மிளகும் உப்பும் போட்டு வேகவிட்டு சாப்பிடலாம் அல்லது தேங்காய் பாலில் சீனி(சக்கரை)கலந்து அதிலிருந்து ஒரு தேக்கரண்டியை அப்பத்தில் ஊற்றி வேக விட்டு பரிமாறலாம்.

சுட்டவுடன் சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.

குறிப்புகள்:

அப்பம் எல்லோருக்கும் விரும்பமானதும், செய்வதற்கு இலகுவானதும், இலங்கை மக்கள மிகவும் விரும்பி உண்பதும், கொழுப்பு சத்து நிறைந்ததும் ஆன ஒர் உணவு ஆகும். (A)கவனிக்க வேண்டிய விஷயங்கள் - (1) பாண் துண்டுகள் தேங்காய்நீரில் 3 மணித்தியாலம் ஊறியது. (2)அரிசி 3 மணிநேரம் நீரில் ஊறியது (3)தேங்காய்யை துருவவும்(4)ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும் குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால் ஈஸ்ட் போட்டால் இலகுவாக புளித்துவிடும்,(5)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை இலகுவாக கலற்றி எடுக்கலாம், அப்பத்தை திருப்பி போடக்கூடாது அப்பம் முறுகலாக இருக்கவேண்டும். (B)மாற்று முறை - வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல்அரிசி (சிவத்த பச்சை) உபயோகிக்கலாம். (c) எச்சரிக்கை - சர்க்கரை, இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்