ஸ்டஃப்டு இடியாப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இடியாப்ப மாவு - 2 கப்

தண்ணீர் - 4 கப்

உப்பு - ஒரு தேக்கரண்டி

சீனி - அரை கப்

தேங்காய் துருவல் - ஒரு கப்

நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

இடியாப்ப மாவிற்கு பச்சரிசியை கழுவி காயவைத்து இடித்து இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது கடைகளி உடனடி இடியாப்ப மாவுகள் கிடைக்கின்றன. நல்ல தரமான மாவாகப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைத்து இடியாப்ப மாவில் சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் பிசையவும்.

வெந்நீர் மிகவும் சூடாக இருக்கக் கூடாது. மிகவும் சூடான தண்ணீர் ஊற்றினால் மாவு உடனடியாக வெந்து கட்டியாகிவிடும். பதமான சூட்டில் மாவை கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவின் பதம் நன்றாக இருந்தால்தான், பிழிவதற்கு எளிதாக இருக்கும்.

அடுத்து பூரணத்திற்கு, வெறும் வாணலியில் தேங்காயை போட்டு பொன்னிறமாகும் வரை 3 நிமிடம் வதக்கி விட்டு அதில் சீனியை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் பட்டர் ஃபாயில் பேப்பரை போட்டு, பிறகு பிசைந்த மாவை உருட்டி இடியாப்ப உரலில் போட்டு அந்த பேப்பரில் இடியாப்பமாக பிழிந்துக் கொள்ளவும்.

பிறகு பிழிந்து வைத்த இடியாப்பத்தின் ஒரு பாதியில், ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பூரணத்தை வைக்கவும்.

இப்போது இடையாப்பத்தை மடிக்க வேண்டும். இதனை கையால் எடுத்து மடித்தல் சிரமம். வேகாத மாவு என்பதால் மடிக்க வராது. அப்படியே பேப்பரின் பாதியை மடித்து, இடியாப்பத்தை மடிக்கவும்.

ஒரு பக்கம் மடித்த பேப்பரை விரித்தால், இடியாப்பம் படத்தில் உள்ளது போல் இருக்கும்.

பின்னர் இடியாப்பத் தட்டில் நெய் தடவி, அதன் மேல் ஸ்டப்டு இடியாப்பத்தை வைக்கவும். ஒரு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் இட்லித்தட்டை வைத்து, அதற்கும் மேலாக இடியாப்பத்தட்டை வைத்து மூடி வைத்து வேக விடவும்.

சுமார் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால், சுவையான ஸ்டஃப்டு இடியாப்பம் தயாராக இருக்கும்.

குறிப்புகள்:

உள்ளே ஸ்டஃப் செய்வதை தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல், காரம், இனிப்பு, மசாலா என எதைக் கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம்.