ஷீர் குருமா
தேவையான பொருட்கள்:
பால் - அரை லிட்டர்
நொறுக்கிய சேமியா - கால் கப் (அ) ஒரு கைப்பிடி
ஏலக்காய் - 3
பாதாம், முந்திரி - 25 கிராம் (அரைக்க)
சர்க்கரை - அரை டம்ளர்
மில்க் மெயிட் - சிறிய டின் (அ) இரண்டு குழிக்கரண்டி
பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா ஐந்து (வறுத்து சேர்க்க)
கிஸ்மிஸ் பழம் (கருப்பு) - எட்டு
நெய் - மூன்று தேக்கரண்டி
குங்குமப்பூ - ஆறு இதழ்
செய்முறை:
ஷீர் குருமா செய்ய தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ஏலக்காய் சேர்த்து சற்று திக்காக ஆகும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடி சேமியாவை போட்டு கருக விடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள முந்திரி மற்றும் பாதாமை அரைத்து வைக்கவும். மீதமுள்ள முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும். கடைசியாக கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
பாலில் அரைத்த முந்திரி, பாதாம் விழுதினை சேர்த்து காய்ச்சவும். அதனுடன் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும்.
பால் சிறிது நேரம் கொதித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.
அதன் பின்னர் பாலுடன் சர்க்கரை மற்றும் மில்க் மெயிடை ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் கிளறி விட்டு கொதித்ததும் இறக்கவும்.
கடைசியாக அதன் மேல் சாஃப்ரானை தூவி விடவும்.
குறிப்புகள்:
இது பாகிஸ்தானியர்களின் பாரம்பரிய ரிச் பாயாசமாகும். இது நம் ஊர்களிலும் இஸ்லாமிய இல்லங்களில் செய்வார்கள். ருமானி சேமியா என்று சிறியதாக இடியாப்பம் பந்து போல் பாக்கெட்டுகளில் கிடைக்கும். அது வெள்ளையாக இருக்கும், ஆகையால் அதற்கு நெய் நிறைய ஊற்றி பொன் முறுவலாக பொரித்து எடுக்க வேண்டும். பாகிஸ்தானி சேமியா, வருத்ததே கிடைக்கிறது அது லேசாக நெய்யில் வருத்தால் போதும். அடிக்கடி வீட்டில் செய்வதாக இருந்தால் ஏலக்காய் கொதித்த பாலில் சேமியாவை (ரோஸ்டட்) அப்படியே சேர்த்து கொஞ்சம் பாதாம் முந்திரி அரைத்து ஊற்றி மில்க் மெயிட், சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். இதில் கருப்பு கிஸ்மிஸ் போடுவதால் பார்க்க கலர் புல்லாக இருக்கும். மில்க் மெயிட் ஊற்றியதும் அப்படியே கொதிக்க விட்டால் அடி பிடித்து விடும். இதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் எல்லாம் அரைத்தே சேர்க்கவும். சேமியாவும் பொடியாக இருப்பதால் கெட்டியாக ஸ்பூனில் வைத்து ஊட்டி விடலாம். இதை விருந்தாளிகளுக்கு கொடுக்கும் போது நெய்யில் வறுத்தவைகளை அவ்வப்போது தூவி கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்கும். சாப்பிடும் போது மொருமொருப்பாக இருக்கும்.
<br />