வெஜ் தாளிச்சா
தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைக்க:
கடலைப்பருப்பு - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
மஞ்சள் - அரை தேக்கரண்டி
காய் வேக வைக்க:
முருங்கைக்காய் - ஒன்று
கத்திரிக்காய் - மூன்று
கருணைக்கிழங்கு - ஒரு துண்டு
வாழைக்காய் - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியாத்தூள் - மூன்று தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு பெரிய லெமன் அளவு (கெட்டியாக கரைத்து கொள்ளவும்)
தாளிக்க:
எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
கடுகு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு பெரிய கொத்து
கொத்தமல்லி தழை - சிறிது மேலே தூவ
செய்முறை:
காய் கறிகளை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை களைந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த பருப்பை எடுத்து குக்கரில் போட்டு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கி கரண்டியால் ஒன்றும்பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, காய்கறிகள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு, பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி தழை எல்லாவற்றையும் ஒன்றாக போடவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிசறி இரண்டு நிமிடம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு அடுப்பில் வைத்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தீயை மிதமாக வைத்து வேக வைக்கவும். காய்களை குழைய விடாமல் வேக வைக்கவும்.
காய்கள் வெந்ததும் கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். மாங்காய் சேர்த்தால் நன்றாக இருக்கும், மாங்காய் சேர்ப்பதாக இருந்தால் புளியின் அளவை குறைத்து கொள்ளவும்.
புளி வாடை அடங்கியதும் மசித்து வைத்துள்ள பருப்பை அதில் சேர்க்கவும்.
பருப்பை சேர்த்து கிளறி விட்டு அடிப்பிடிக்காமல் கொதிக்க விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை அனைத்தையும் கொதித்துக் கொண்டிருக்கும் தாளிச்சாவில் சேர்க்கவும்.
சுவையான வெஜ் தாளிச்சா ரெடி. .
குறிப்புகள்:
இது இஸ்லாமிய இல்லங்களில் ஒரு விசேஷம் என்றால் பகாரா கானா, கறி உருளைக்கிழங்கு சால்னா, தாளிச்சா, மட்டன் ப்ரை (அ) மட்டன் கூட்டு, வெங்காயமுட்டை, அப்பளம், ஏதாவது இரு வகை ஸ்வீட் செய்வார்கள்.
இது பிரியாணிக்கும் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும். பிரியாணிக்கு செய்வதாக இருந்தால் கெட்டியாக செய்து கொள்ளவும், பகாரா கானாவிற்கு என்றால் சாம்பார் போல் செய்து கொள்ளவும்.
இது கர்ப்பிணி பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும், வாய்க்கு ருசிப்படும். மேலே உள்ள குறிப்பில் வாழைக்காய், மாங்காய் இல்லாததால் சேர்க்கவில்லை.