முருங்கைக்கீரை பொருமா
தேவையான பொருட்கள்:
ஆய்ந்த முருங்கைக்கீரை - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
புழுங்கல் அரிசி - ஒரு கப்
சோம்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
தேங்காய் விழுது - கால் கப்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 5 (அ) 6
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய்
செய்முறை:
முருங்கைக்கீரையைத் தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
வெறும் வாணலியில் அரிசியுடன் மிளகாய் வற்றலைப் போட்டு கைவிடாமல் வறுத்து எடுத்து ஆற வைக்கவும். (அரிசி கருகிவிடாமல் பொரி அரிசி பதத்தில் இருக்க வேண்டும்).
அரிசி ஆறியதும் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று நிறம் மாறியதும், அத்துடன் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும். (இதில் வெறும் தண்ணீரை ஊற்றுவதற்கு பதிலாக அரிசி களைந்த தண்ணீர் இருந்தால் ஊற்றலாம். அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி செய்தால் அதிகச் சுவையாக இருக்கும்).
தண்ணீர் கொதித்ததும் முருங்கைக்கீரையைப் போட்டு 3 நிமிடங்கள் கிளறிவிட்டு வேகவிடவும்.
கீரை வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொரி அரிசி மாவைச் சிறிது சிறிதாகத் தூவிவிட்டு கிளறவும். (மாவை அப்படியே கொட்டிக் கிளறினால் மாவு கட்டிகளாகிவிடும். அதனால் மாவைச் சிறிது சிறிதாகத் தூவி கட்டிகளாகாதபடி கிளற வேண்டும்).
மாவு கீரையுடன் சேர்ந்து சற்று கெட்டியாக ஆனதும் தேங்காய் விழுதைச் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.
2 நிமிடங்கள் கழித்து கீரை வெந்து வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக வந்ததும் ஒரு முறை கிளறிவிட்டு இறக்கவும்.
குறிப்புகள்:
உடல் ஆரோக்கியத்திற்கேற்ற முருங்கைக்கீரை பொருமா தயார். நறுக்கிய சின்ன வெங்காயத்தை மேலே தூவி சூடாகப் பரிமாறவும். இதை பச்சை வெங்காயத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். பச்சை வெங்காயம் விரும்பாதவர்கள் வெங்காயத்தை வதக்கி பொருமாவுடன் கலந்து சாப்பிடலாம்.