மின்னெலை ரசம்
தேவையான பொருட்கள்:
மின்னெலை - 20 இலைகள்
புளி - பெரிய எழுமிச்சை அளவு
துவரம்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
தக்காளி - ஒன்று
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/ 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - பாதி
பூண்டு பல்(பெரியதென்றால்) - 4
ஜீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகுப்பொடி- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
சோம்புப்பொடி- 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டி
எண்ணை - ஒரு மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இதுதான் மின்னெலை என்பது. இதனை முள்ளெலை என்றும் சொல்வார்கள். இது கிராமப்புறங்களில் கிடைக்கக்கூடியது.
தக்காளியை துண்டங்களாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பூண்டை தோல் நீக்கி ஒன்றாய் சேர்த்து நசுக்கி கொள்ளவும். புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பை கழுவி குக்கரில் மசிய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு கரைத்துவைத்துள்ள புளித்தண்ணீரில் பருப்பு நீரை சேர்க்கவும்.
அதில் மிளகாய்ப்பொடி தவிர்த்து அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும். அத்துடன் நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், நசுக்கிய வெங்காயம் பூண்டில் பாதி(மீதம் தாளிக்க) சேர்க்கவும்.
மின்னெலையை நன்கு கழுவி அதனையும் புளித்தண்ணீரில் சேர்த்து, கைகளால் நன்கு நொறுங்க பிசையவும். அத்துடன் உப்பு சேர்க்கவும். புளிக்கரைசல், பருப்பு நீர் அனைத்தும் சேர்ந்து முக்கால் லிட்டர் அல்லது 800 மில்லி அளவிற்கு இருக்குமாறு எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விடவும். அதில் கடுகு, வெந்தயம், போட்டு தாளித்து, ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.
அதன் பின்னர் மீதம் வைத்துள்ள வெங்காயம் பூண்டைப் போடவும். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின்பு, மிளகாய்ப்பொடியை சேர்க்கவும்.
மிளகாய் போடி சேர்த்து அதை சிறிது நேரம் கிளறிவிடவும்.
கிளறிய பின்பு அதில் தயார் செய்து வைத்துள்ள புளிக்கலவையை ஊற்றவும். மிதமான தீயில் வேகவிடவும்.
ரசம் நன்கு நுரைத்து கொதி வரும்போது கிளறிவிட்டு இறக்கவும்.
இதுவே மின்னெலை ரசம். இந்த ரசம் பருப்பு உசிலி, கொத்துபருப்பு இவைகளுடன் சேர்த்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்