மலேசியன் நாசிக்கோரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - ஒன்று

கருவாடு - 100 கிராம்

இறால் - 100 கிராம்

சாதம் - 3 கப்

கொத்தமல்லி - 3 கொத்து

தக்காளி - 3

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

மீன் மசாலா - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - அரை கப்

செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறு சிறு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். சாதத்தை வடித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி ஒரு நிமிடம் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

கருவாட்டின் தலையை நீக்கி விட்டு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு கருவாடுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மீன் மசாலா, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு போட்டு அரை மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து பிரட்டி 5 நிமிடம் வைக்கவும்.

வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்திருக்கும் கருவாடை போட்டு 5 நிமிடம் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இடையில் கரண்டியால் திருப்பி விடவும்.

இறாலை தோல் உரித்து சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு இறாலுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மீன் மசாலா, அரை தேக்கரண்டி உப்பு போட்டு அரை மேசைக்கரண்டி தண்ணீர் தெளித்து பிரட்டி 5 நிமிடம் வைக்கவும்.

கருவாடை பொரித்த அதே எண்ணெயில் பிரட்டி வைத்திருக்கும் இறாலை போட்டு பொரிக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை போடவும்.

இறால் மசாலாவுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் நன்கு வதங்கும் வரை 5 நிமிடம் பிரட்டவும்.

5 நிமிடம் கழித்து அதனுடன் பொரித்து வைத்திருக்கும் கருவாடை போட்டு ஒரு நிமிடம் கிளறி விடவும்.

பிரட்டிய பிறகு வடித்த சாதத்தை போட்டு 5 நிமிடம் கிளறவும். 5 நிமிடம் கழித்து மேலே பொரித்த முட்டையை போட்டு ஒரு முறை கிளறி விடவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லித் தழையை மேலே தூவி கிளறி இறக்கவும்.

ருசியான மலேசியன் நாசிக்கோரி தயார்.

குறிப்புகள்:

மலேசிய இஸ்லாமியர்கள் விரும்பி சாப்பிடும் மதிய உணவு இது.