மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
மட்டன் - முக்கால் கிலோ
பாஸ்மதி அரிசி - அரை கிலோ (அ) இரண்டரை டம்ளர்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி + 4 தேக்கரண்டி
புளித்த தயிர் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி மற்றும் புதினா இலைகள் - தலா ஒரு கப் (அரிந்தது)
நெய் - 2 தேக்கரண்டி
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு
வறுத்து பொடிக்க:
சாஜீரா - 3 தேக்கரண்டி
பட்டை - ஒரு விரல் அளவுத் துண்டு
ஏலக்காய் - 7
கிராம்பு - 10
அன்னாசிப்பூ - ஒன்று (விரும்பினால்)
தாளிக்க:
எண்ணெய் - கால் கப்
பட்டை - ஒரு சுண்டு விரல் அளவு
பிரிஞ்சி இலை - ஒன்று
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
செய்முறை:
மட்டனை நன்கு சுத்தம் செய்துவிட்டு ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தயிர் மற்றும் ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு நன்றாகப் பிரட்டி வைக்கவும். வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியைச் சிறு துண்டுகளாகவும் அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். அரிசியை ஊற வைக்கவும்.
வறுத்து பொடிக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை மிதமான தீயில் வாசம் வர வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ளவைகளைப் போட்டுத் தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். (வதக்கும் போது ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரமாக வதங்கும்). வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.
அதன் பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி மசிய வதக்கவும். பிறகு மசாலாத் தூள்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கிவிட்டு, பிரட்டி வைத்திருக்கும் மட்டனைச் சேர்த்து நன்கு பிரட்டவும். ஏற்கனவே சிறிது உப்பு சேர்த்திருப்பதால் சரிபார்த்து விட்டு தேவையெனில் மேலும் சிறிது உப்பு சேர்த்து, பாதி அளவு மல்லி மற்றும் புதினா இலைகளையும் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு குக்கரை மூடி விசில் போடவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து 20 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
மட்டன் வெந்து மசாலா தயாரானதும், ஒரு பாத்திரத்தில் தாராளமாகத் தண்ணீர் விட்டு (அரிசியை வேக வைப்பதற்காக) அரிசிக்கு தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். (விரும்பினால் அதில் ஒரு பாண்டன் இலையை நறுக்கிப் போடலாம்). நன்கு கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியினை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும். நன்கு கொதித்து அரை பதமாக வெந்ததும் வடிக்கட்டி வைக்கவும்.
தம் போடும் சட்டியில் தயார் செய்த மட்டன் மசாலாவைக் கொட்டி 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பில் தம் போடும் தட்டு அல்லது இரும்பு தோசைக் கல்லை வைத்து அதன் மேல் இந்தச் சட்டியை வைக்கவும்.
தட்டு சூடேறி மசாலா கொதிக்க ஆரம்பிக்கும் போது அரை பதமாக வேக வைத்த சாதத்தைப் பரவலாகக் கொட்டி வைக்கவும். அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி அளவு பொடித்த பொடியைத் தூவி, மீதமுள்ள மல்லி, புதினா இலைகளையும் தூவவும். அத்துடன் அரை தேக்கரண்டி தண்ணீரில் கலர் பவுடரைக் கரைத்து பரவலாக ஊற்றி, நெய்யையும் பரவலாக ஊற்றிவிடவும். அடுப்புத் தணலை மிதமாக வைத்து மூடியில் அலுமினிய ஃபாயிலை போட்டு மூடிவிடவும். மூடியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து தம்மில் போடவும்.
20 அல்லது 25 நிமிடங்கள் அப்படியே வைத்துவிடவும். பிறகு திறந்து பார்த்தால் மேலே சாதம் நன்கு புழுங்கியிருக்கும். மெதுவாக ஓரத்தில் கரண்டியால் சாதத்தை ஒதுக்கி விட்டு பார்த்தால் மசாலா நன்கு சுண்டி இருக்கும். அது போன்று இருந்தால் அடுப்பை அணைத்துவிடவும். இல்லையெனில் மேலும் 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். பரிமாறும் முன் நன்றாகக் கிளறிவிட்டுப் பரிமாறவும்.
உதிரியான, மணமான மட்டன் பிரியாணி தயார். வெறும் ரைத்தாவுடன் மட்டும் சாப்பிட்டாலே ரிச் டேஸ்ட்டாக இருக்கும்.
குறிப்புகள்:
இதே முறையில் சிக்கனிலும் செய்யலாம். மட்டன் வேக அதிக நேரம் எடுக்கும் என்பதால் நான் 25 நிமிடங்கள் வேக வைப்பேன். உங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதலாகவோ அல்லது குறைவான நேரத்திலோ மட்டனை வேக வைத்துக் கொள்ளலாம்.