மட்டன் கீமா
தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி - அரை கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் - அரை மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 2
மல்லிவிதை - 2 தேக்கரண்டி
லவங்கப்பட்டை - ஒரு அங்குலத்துண்டு
உலர்ந்த மிளகாய் - 3
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறு கட்டு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கடலைப்பருப்பை கழுவி சுத்தம் செய்து ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விடாமல் மல்லி, மிளகாய்வற்றல், மஞ்சள்தூள், சீரகம் போட்டு வறுத்து, அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
பூண்டு, இஞ்சியைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி கசகசாவுடன் தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
கொத்துக்கறியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி, இஞ்சி பூண்டு விழுது, இரண்டு தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
கறி நனையும் அளவிற்கு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவிடவும். கறி சற்று வெந்ததும் ஊறவைத்துள்ள கடலைப்பருப்பை போட்டு அந்த தண்ணீரையும் ஊற்றி கொதிக்கவிடவும்.
பருப்பு நன்கு வெந்ததும் தேங்காய், கசகசா விழுதை போட்டு தேவையான அளவு உப்பை நீரில் கரைத்து ஊற்றவும்.
தீயைக் குறைத்து வைத்து சுமார் 25 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
பிறகு புளிக்கரைசலில் இரண்டு தேக்கரண்டி விட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.
நன்கு வெந்து கெட்டியான குழம்பானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பிறகு வாணலியில் சிறிது நெய் விட்டு மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இறக்கி வைத்துள்ள குழம்பில் ஒரு கரண்டி எடுத்து வாணலியில் விட்டு கலக்கி குழம்பில் ஊற்றவும்.
குழம்பினை நன்கு கலக்கி பிறகு பரிமாறவும்.