ப்ரான் வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள்:
இறால் - கால் கிலோ
காய்கறிகள் - கால் கிலோ (விரும்பியது)
(கேரட் - 100 கிராம், பீன்ஸ் - 50 கிராம், பீஸ் - 100கிராம்)
பிரியாணி அரிசி - அரை கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலம் - 3
சிறிய எலுமிச்சை - 1
பச்சை மிளகாய் - 4
மல்லி, புதினா - கைப்பிடியளவு
தேங்காய் - பாதி (பால் எடுக்க)
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 50 மில்லி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
முதலில் இறாலை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகட்டி உப்பு, சிறிது சில்லி பவுடர் சேர்த்து பிரட்டி வைக்கவும். தனியாக 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக பொரித்து எடுக்கவும். அரிசியை தண்ணீரில் ஊறவைக்கவும்.
காய்கறிகள், வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா எல்லாம் கட் செய்து வைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்தவுடன், கட் செய்த வெங்காயம் போட்டு சிவந்தவுடன், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். வாசம் வந்தவுடன், மல்லி, புதினா, தக்காளி போட்டு பிரட்டவும். உப்பு, சில்லி பவுடர் சேர்க்கவும். 5 நிமிடம் சிம்மில் மூடி வைக்கவும். நன்கு மசிந்தவுடன் காய்கறிகளை போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். காய் வெந்துவிடும். பொரித்த இறால் சேர்க்கவும்.
பின்பு தேங்காய்ப்பால், தண்ணீர் கலந்து ஒன்றுக்கு இரண்டு என்று அளந்து வெந்த காய்கறியில் சேர்க்கவும். உப்பு சரிபார்க்கவும்,எலுமிச்சை பிழியவும்.
கொதிவந்தவுடன் அரிசியை தட்டி மூடி விடவும். மீடியம் நெருப்பில் வைக்கவும். தண்ணீர் வற்றி சாதம் வெந்து வரும் போது சிம்மில் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு புழுங்க விடவும். அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி பரிமாறவும்.
சுவையான கமகமக்கும் இறால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.