பிரியாணி நோன்பு கஞ்சி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - 2 கொத்து
காரட் - ஒன்று
புதினா - ஒரு கொத்து
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை கப்
வெள்ளை கொண்டைக்கடலை - 50 கிராம்
ராஜ்மா - கால் கப்
சேமியா - அரை கப்
மக்ரோனி - கால் கப்
கல் உப்பு - 2 தேக்கரண்டி
தலை கறி - கால் கிலோ
அஜினமோட்டோ - கால் தேக்கரண்டி
கிராம்பு - 3
ஏலக்காய் - ஒன்று
பட்டை - ஒரு அங்குலத் துண்டு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி துண்டுகளாக நறுக்கவும். காரட்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழை மற்றும் புதினா இலை இரண்டையும் ஆய்ந்து தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
ஆட்டில் உள்ள தலை கறியை எடுத்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மேலே கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பட்டை வெடித்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
இஞ்சி, பூண்டில் உள்ள பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதங்கியதும் கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கி விட்டு பிறகு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி விடவும்.
பிரட்டிய பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியை போட்டு 2 நிமிடம் கிளறவும். 2 நிமிடம் கழித்து நறுக்கின தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
2 நிமிடம் வதங்கியதும் கறி வேகுவதற்கு குக்கரில் 5 கப் தண்ணீர் ஊற்றி மற்றும் உப்பு போட்டு குக்கரை மூடி வெய்ட் போட்டு 2 விசில் விடவும். தலை கறி என்பதால் சீக்கிரம் வெந்து விடும்.
2 விசில் வந்ததும் குக்கர் மூடியை திறந்து கறி வெந்ததும் அடுப்பில் வைத்து 3 நிமிடம் கொதிக்க விடவும். வெள்ளை கொண்டைக்கடலையும், ராஜ்மா இரண்டையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். ஊறியதும் ஒரு முறை இரண்டு பருப்பையும் தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
கொதித்ததும் அரிசியை களைந்து போட்டு அதனுடன் ராஜ்மா, கொண்டைக்கடலை, காரட், கடலைப் பருப்பு, மக்ரோனி போட்டு 3 நிமிடம் கிளறி விட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும் மீண்டும் 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெய்ட் போட்டு மீண்டும் 4 விசில் விடவும்.
4 விசில் வந்ததும் மூடியை திறந்து சேமியாவை போட்டு ஒரு நிமிடம் கரண்டியால் நன்கு கிளறி விடவும்.
அதன் பின்னர் தேவைப்பட்டால் மேலே கொத்தமல்லித் தழை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விடவும். சேமியா உடனே வெந்து விடும். ஆகையால் இறக்கும் சமயத்தில் சேமியா சேர்க்க வேண்டும். இல்லையென்றால் கரைந்து விடும்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் மற்றொரு வகையான பிரியாணி நோன்பு கஞ்சி தயார்.