பரோட்டா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - அரை கிலோ

சீனி - ஒரு மேசைக்கரண்டி

பால் - முக்கால் கப்

உப்பு - ஒரு தேக்கரண்டி

சோடா உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். பாலுடன் சீனி, உப்பு, சோடா உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

பின்னர் அதை மைதா மாவில் சிறிது சிறிதாக ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, பெரிய எலுமிச்சை பழ அளவுக்கு உருண்டையாக உருட்டி அதில் எண்ணெய் தடவி உருட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

ஒரு பெரிய தட்டை திருப்பி போட்டு அதில் ஒரு மைதா உருண்டையை மையத்தில் வைத்து கைகளால் அழுத்தி சற்று வட்டமாக தட்டவும்.

பிறகு சப்பாத்தி கட்டை கொண்டு தட்டு முழுவதும் படரும் படி தேய்க்கவும்.

மாவின் மேலே எண்ணெய் தேய்த்து, ஓரங்களைப் பிடித்து இழுத்து தட்டின் வளைவு பாகத்தில் மடித்து விடவும்.

பெரிதாக தட்டு முழுவதும் பரப்பியவுடன் ஒரு ஓரத்தினைப் பிடித்து மாவை தூக்கவும். கொசுவம் வைத்த துணி போல் வரும். அதனை அப்படியே சுற்றி 5 நிமிடம் ஊற விடவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் தேய்த்து சுருட்டி வைத்து ஊறவிடவும்.

5 நிமிடங்கள் ஊறியபிறகு ஒவ்வொன்றாய் எடுத்து தட்டின் பின்புறம் வைத்து, சப்பாத்திக் கட்டையால் வட்டமாக தேய்க்கவும்.

இந்த முறை தேய்க்கும்போது மிகவும் அழுத்தக் கூடாது. சற்று மென்மையாக தேய்க்கவேண்டும். அதேபோல் சற்று தடிமனாகவே தேய்த்துக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாக இருக்கக்கூடாது.

ஒரு தோசைக்கல்லில் அல்லது வாணலியில் ஒவ்வொன்றாய் போட்டு எண்ணெய் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் பொன்னிறமாக சிவந்து வரும் வரை திருப்பிப் போட்டு வேகவிடவும்.

நன்கு வெந்ததும் எடுத்து, சூடாக இருக்கும்போதே ஒரு தட்டில் வைத்து இரண்டு உள்ளங்கைகளாலும் பரோட்டாவை உள்நோக்கி தட்டவும். இப்படி செய்வதன்மூலம் பரோட்டா இழைஇழையாக வரும். இதனை சூடாக இருக்கும்போதே செய்யவேண்டும். முழுவதும் உடைந்து போய்விடாதவாறு பக்குவமாக செய்யவேண்டும். அனுபவத்தில் வந்துவிடும்.

இப்போது சுவையான பரோட்டா தயார்.

குறிப்புகள்:

பரோட்டா சற்று ஆறியபின்புதான் சுவையாக இருக்கும். பரோட்டாவை எடுத்து வைத்தபிறகு அந்த சூட்டிலேயே இன்னமும் சற்று வெந்து மிருதுவாகும். ஆறிய பரோட்டாவை சூடான சால்னாவுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.