பகாறா கானா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தரமான பாசுமதி அரிசி ‍- ஒரு படி (எட்டு டம்ளர்‍)

எண்ணெய் - ஒரு டம்ளர் (200 மில்லி)

வெங்காயம் - கால் கிலோ

தயிர் - 175 மில்லி

பச்சைமிளகாய் - 8

எலுமிச்சை ‍- ஒன்று

ப‌ழுத்த‌ த‌க்காளி - ஒன்று

ப‌ட்டை - 2 அங்குல‌ துண்டு இர‌ண்டு

கிராம்பு - ஆறு

ஏல‌ம் - நான்கு

நெய் (அ) டால்டா ‍- 25 மில்லி

இஞ்சி பூண்டு விழுது - 8 தேக்க‌ர‌ண்டி

கொத்தம‌ல்லி த‌ழை - ஒரு சிறிய‌ க‌ட்டு (கைக்கு இர‌ண்டு கைப்பிடி)

புதினா - சிறிய‌ அரை க‌ட்டு (கைக்கு ஒரு கைப்பிடி)

உப்பு - எட்டு தேக்க‌ர‌ண்டி (அ) தேவையான‌ அள‌வு

செய்முறை:

அரிசியை க‌ளைந்து 20 நிமிடம் ஊற‌ வைக்க‌வும். வெங்காய‌த்தை நீள‌வாக்கில் நறுக்கிக் கொள்ள‌வும். கொத்தம‌ல்லி மற்றும் புதினாவை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும். த‌க்காளியை இர‌ண்டாக‌ நறுக்கி வைக்க‌வும்.

ஒரு பெரிய‌ வாய‌க‌ன்ற‌ பாத்திரத்தில் எண்ணெயை காய‌ வைத்து அதில் ப‌ட்டை, ஏல‌ம், கிராம்பு போட்டு வெடித்த‌தும் வெங்காயம் சேர்த்து வ‌த‌க்கி மூடி போட்டு தீயை மிதமாக வைத்து வேக‌ விட‌வும்.

வெங்காய‌ம் சிவந்து விட கூடாது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வ‌த‌க்கி மூன்று நிமிட‌ம் அடுப்பை குறைத்து வைக்க‌வும் இதுவும் சிவற கூடாது.

இஞ்சி பூண்டு விழுது வ‌த‌ங்கிய‌தும் கொத்தம‌ல்லி, புதினா, ப‌ச்சைமிள‌காய், த‌யிர் அனைத்தையும் சேர்க்க‌வும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து க‌ருகவிடாமல் தீயை மிதமாக வைத்து வேக‌ விட‌வும்.

அதன் பிறகு ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை + ஒன்று ஊற்றி கொதிக்க‌ விட‌வும்.

பின்னர் ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீரை வடித்து விட்டு இந்த கலவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

அதனுடன் பாதியாக நறுக்கின தக்காளி, நெய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறை பிழிந்து மீண்டும் கிளறி விட‌வும்.

தீயை அதிக‌மாக வைத்து கொதிக்க‌ விட‌வும். முக்கால் ப‌த‌ம் த‌ண்ணீர் வ‌ற்றும் போது தீயை குறைத்து வைக்கவும்.

பிறகு அடுப்பின் மேல் த‌ம் போடும் க‌ருவி (அ) தோசை த‌வ்வா (அ) டின் மூடி வைத்து ச‌ட்டியை அதன் மேல் வைத்து ச‌ரியான‌ மூடி போட்டு அத‌ன் மேல் வெயிட் (அ) சூடான‌ குழ‌ம்பு உள்ள‌ ச‌ட்டியை வைத்து 20 நிமிட‌ம் த‌ம்மில் போடவும்.

ச‌ட்டியை திற‌ந்து லேசாக‌ பிரட்டி விட்டு மற்றொரு ப‌வுளில் எடுத்து வைக்க‌வும்.

குறிப்புகள்:

இதில் தாளிப்பு க‌ருகிவிட்டால் சாத‌ம் க‌ல‌ர் மாறி விடும், விசேஷ‌ங்க‌ளில் பாதி எண்ணெய், மீதிக்கு டால்டா நெய் என்று சேர்ப்பார்க‌ள், அது அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு சேர்த்து கொள்ள‌வும். இந்த‌ ப‌காறா கானாவிற்கு சைட் டிஷ்ஷாக க‌றி உருளை குருமா, வெஜ் தால்சா, சிக்க‌ன் (அ) ம‌ட்ட‌ன் ஃப்ரை, ஊறுகாய், அப்ப‌ள‌ம், வெங்காய‌ முட்டை, மிட்டாகானா (அ) கேசரி பொருந்தும். இது இஸ்லாமிய இல்ல கல்யாணங்களில் செய்வது, அனைத்தும் விசேஷ‌த்தில் வைப்ப‌து. இதற்கு சிக்கன் குருமா, மீன் குழம்பும் கூட பொருத்தமாக இருக்கும்.