தேங்காய் பால் சாதம்
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - ஒன்றரை கப்
அரிசி - ஒன்றரை கப்
சின்ன வெங்காயம் - 12
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
பட்டை - 2
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுக்கவும். அரிசியை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து இரண்டே கால் கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு எலக்டிரிக் குக்கரில் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் இரண்டே கால் கப் தேங்காய் பால் சேர்க்கவும்.
மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றவும். உப்பு சேர்க்கவும்.
குக்கர் பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பில் வைத்தே கொதிக்க விடவும்.
சுமார் 3 நிமிடங்கள் கழித்து, கொதித்து நுரை வரும் போது அரிசியை போடவும்.
அதன் மேலே கொத்தமல்லி தழையினைத் தூவி கிளறி விட்டு 2 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் பாத்திரத்தை எடுத்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து மூடி வைத்து வேகவிடவும்.
சாதம் நன்கு வெந்தவுடன் பாத்திரத்தை குக்கரில் இருந்து எடுத்துவிடவும். மேலே கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள்:
இந்த சாதத்துடன் தாளிச்சா, கோழி குருமா போன்றவை சேர்த்து சாப்பிட அலாதி சுவையாக இருக்கும்.