தம்ரூட் அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 2 1/2 டம்ளர்

சீனி - 3 டம்ளர்

முட்டை - 12

நெய் - 250 கிராம்

கண்டன்ஸ்ட் மில்க் - 150 கிராம்

ஏலக்காய் - 7

முந்திரி -12

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். முட்டையை ரூம் டெம்ப்ரேச்சரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

முட்டையை மிக்ஸியில் உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.

வானலியில் ரவையை நிறம் மாறாமல் லேசாக வறுத்து கொள்ளவும்.(நன்றாக வறுத்து விட கூடாது).

அடித்து வைத்திருக்கும் முட்டையை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி விட்டு அதில் உப்பையும் சீனியையும் சேர்த்து கைகளினாலோ அல்லது மரக்கரண்டியாலோ நன்கு கரைத்து கொள்ளவும்.(பீட்டரால் வேண்டாம்)

முட்டையில் சீனி கரைந்ததும் ரவை, கண்டஸ்ட்மில்க் மற்றும் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு ஒன்று சேர அதே போல் நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து (படத்தில் உள்ளது போல்) அதில் நெய்யை ஊற்றி உருக செய்து அதில் முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு பின்பு கலக்கி வைத்திருக்கும் கலவையை ஊற்றவும்.

கரண்டியை கொண்டு கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். சீக்கிரம் அடியில் பிடிக்க ஆரம்பிக்கும் எனவே அடிவரை நன்றாக கிளறவும். கொஞ்சம் கொதிக்க ஆரம்பித்து கலவை கெட்டி கொடுக்க ஆரம்பிக்கும் அப்போதே மற்றொரு அடுப்பில் இரும்பு அல்லது இந்தாலியன் தோசை கல்லை வைத்து சூடு படுத்தவேண்டும்.

தோசை கல் சூடு வந்ததும், இந்த சட்டியை அதன் மேல் வைத்து அடுப்பை மிதமான தணலில் வைத்து மூடியில் துணியை கட்டியோ, பேப்பரை வைத்தோ மூடி, மூடியின் மேல் வெய்ட் உள்ள பொருளை வைக்கவும்.

பதினைந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை லேசாக மேல் புறம் கொஞ்சம் கீழே வரும்படி கிளறி விட்டு மறுபடியும் தம் போடவும்.

இருபது நிமிடம் கழித்து மூடியை திறந்து கத்தியால் குத்தி பார்த்தால் மேல் புறம் மட்டுமே பிசுப்பிசுப்பாக ஒட்டியிருக்க வேண்டும். உள்ளே உள்ள கலவை ஒட்ட கூடாது. இதுவே பதம். இப்படி இருந்தால் அடுப்பை அணைத்து விட்டு வறுத்த முந்திரி பருப்பை தூவி அப்படியே வைத்து விடவும். நன்கு ஆறிய பிறகே துண்டு போடவோ, எடுக்கவோ சரியான பதத்துடன் இருக்கும்.சாப்பிட சுவை சூப்பராக இருக்கும்.

குறிப்புகள்:

இதில் நமது ஊர் கிராமங்களில் கிடைக்கும் நாட்டுமுட்டையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதன் வித்தியாசம் நிச்சயம் தெரியும்.

தம் போடுவதில் நெருப்பு அடுப்புகளில் போடும் முறையே பாரம்பரிய முறை. கிளறும் போது திக்கான கலவையானவுடன் அடுப்பில் தகதகவென இருக்கும் நெருப்பு துண்டங்களை நாம் மூடிய மூடியின் மேல் போட்டு விடுவார்கள் கீழேயும் எரிய விடாமல் தணலாக வைத்திருப்பார்கள். இப்படி வைத்திருப்பதால் மேலேயும் லேசாக சிவந்தார்போல் இருக்கும். இடையில் ஒரு முறை கிளறவும் இதில் தேவையில்லை.

எக் பீட்டரால் இந்த கலவையை அடித்தால் பதம் மாறி விடும் எனவே நான் குறிப்பிட்டது போல் தான் கலவையை கலக்க வேண்டும். மைக்ரோவேவிலும் இது சரியாக வராது.