தம்மடை (2)
தேவையான பொருட்கள்:
ரவா - 5 கப்
சீனி - 8 கப்
டால்டா - 400 கிராம்
பசுநெய் - 100 கிராம்
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 50 கிராம்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
முட்டை - 6
பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 10
செய்முறை:
முதலில் பாலை நன்கு சுண்டக் காய்ச்சி ஆறவைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி, அதில் பொடித்த ஏலக்காய் மற்றும் சீனியைச் சேர்த்து ஒரு கிரைண்டர் அல்லது பெரிய மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
சீனி நன்றாக அரைபட்ட பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி ரவா, பால் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு தட்டில் (தாம்பாளம்) மண்போட்டு நன்கு சூடாகும் வரை எரித்து, பின்பு ஒரு தட்டையான பாத்திரம் அல்லது சட்டியை மண் மேல் வைத்து டால்டா, நெய் எல்லாம் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய முந்திரி மற்றும் திராட்சையைப் போட்டுப் பொரித்துக் கொள்ளவும்.
நன்கு பொரிந்ததும், ரவா, சீனி, முட்டை கலவையை ஊற்றி சற்று நேரம் விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலவை நன்கு திரண்டு வந்ததும் ஒரு மூடியை சட்டியின் மேல் வைத்து மூடி, அதன்மீது நெருப்புத் துண்டங்களைப் போட்டு நெருப்பு அணைந்துவிடாதவாறு விசிறியால் விசிறிக் கொண்டு இருக்கவும்.
கீழே அடுப்பு சீராக எரிந்தவண்ணம் இருக்கவேண்டும். சுமார் அரைமணி நேரம் சென்றபின் திறந்து பார்த்து, பொன்னிறம் வந்திருக்கும் பட்சத்தில் இறக்கி ஆறவைக்கவும்.
நன்கு ஆறிய பிறகு நமக்கு தேவையான வடிவங்களில் நறுக்கிக் கொள்ளலாம்.