தம்மடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கிலோ

முட்டை - 10

சீனி - 500 கிராம்

கன்டண்ஸ்ட் மில்க் - 2 டின்

நெய் - 600 கிராம்

மஞ்சள் கலர் - தேவையான அளவு

ரோஸ் எசன்ஸ் - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

முந்திரி - 15

பாதாம் - அலங்கரிக்க (விரும்பினால்)

செய்முறை:

அனைத்தையும் தயாராக வைக்கவும். பாதாமை வெந்நீரில் போட்டு தோலுரித்து வைக்கவும்.

முட்டைகளை நன்றாக நுரை வரும்படி கலக்கவும்.

கலக்கிய முட்டையுடன் சீனியை சேர்க்கவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக ரவையை சேர்த்து கலக்கவும்.

நன்றாக கலக்கிய பின் நெய் சேர்க்கவும். கலர் மற்றும் எசன்ஸ் சேர்க்கவும். கலர் போதவில்லையெனில் மேலும் சேர்த்துக் கொள்ளவும். எசன்ஸ் வாசம் வருகிறதா என நுகர்ந்து பார்த்து போதவில்லையெனில் அதுவும் சேர்த்து கொள்ளவும்.

ஒரு கன்டண்ஸ்ட் மில்க் டின்னை மட்டும் இப்போது ஊற்றி கலக்கவும்.

இந்த கலவையை ஒரு கடாயில் வைத்து இதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரியையும் சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து கிண்டவும். சில நிமிடங்களில் கலவை கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

கெட்டியான கலவையை ஒரு ட்ரேயில் ஊற்றி அதில் மீதியுள்ள ஒரு கன்டண்ஸ்ட் மில்க் டின்னை ஊற்றி கலந்து விடவும்.

மேலே பாதாமை வைத்து அலங்கரிக்கவும்.

150C சூட்டில் 20 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும். மேலே லேசான பொன்னிறம் வந்தவுடன் அவனிலிருந்து எடுத்து விடவும். சுவையான தம்மடை ரெடி.

குறிப்புகள்:

பொதுவாக தம்மடைக்கு பால் சேர்த்து செய்வார்கள். இதில் பாலுக்கு பதிலாக கன்டண்ஸ்ட் மில்க் சேர்த்துள்ளேன். அதனால் கலவை கொஞ்சம் கெட்டியாகத்தான் இருக்கும். அதனால் அடுப்பில் ரொம்ப நேரம் கிண்ட தேவையில்லை. அடுப்பில் ஏற்கனவே கொஞ்சம் வேகவிட்டதால் அவனிலும் வெகு நேரம் இருக்க தேவையில்லை. தம்மடை உள்ளே கொஞ்சம் கொழகொழவென்று இருக்கும் போதே எடுத்து விடவும். அப்போதுதான் நன்றாக இருக்கும். ஆனாலும் உள்ளே மாவாக இல்லாமலும் பார்த்து கொள்ளவும்.