சென்னை சிக்கன் பிரியாணி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் எலும்புட‌ன் - முக்கால் கிலோ

தரமான பாசுமதி அரிசி - அரை ப‌டி (4 ட‌ம்ள‌ர்)

பழுத்த தக்காளி - ஆறு

பெரிய வெங்காயம் - ஐந்து

இஞ்சி பூண்டு விழுது - நான்கு மேசைக்கரண்டி

கொத்தமல்லி - அரை கைப்பிடி

புதினா - கால் கைப்பிடி

பச்சை மிளகாய் - 8

தயிர் - 150 மில்லி

மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு (சிக்கன் தாளிக்கும் கூட்டுக்கு + வடிக்கும் அரிசிக்கு)

ரெட் கலர் பொடி - கால் தேக்கரண்டி

நெய் - இரண்டு மேசைக்கரண்டி

எலுமிச்சை ப‌ழ‌ம் - ஒன்று

எண்ணெய் - 200 மில்லி

ப‌ட்டை - 2 அங்குல‌ துண்டு இர‌ண்டு

கிராம்பு - நான்கு

ஏல‌க்காய் - மூன்று

செய்முறை:

அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். சிக்கனை கொழுப்பு நீக்கி சுத்தம் செய்து 6 அல்லது 7 முறை நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் 8 துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். ஓவ்வொரு முறை ஏதேனும் பொருட்க‌ள் சேர்த்து வ‌த‌க்கும் போதும் அடுப்பின் அன‌லை ந‌ன்கு குறைத்து வைத்து மூடி போட்டு விட‌வும் அப்போது தான் வாசனை ந‌ன்கு வ‌ரும்.

அதனுடன் தக்காளியை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், 4 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு தக்காளியை மசியவிடவும்.

த‌க்காளி ம‌சிந்த‌தும் சிக்க‌ன் ம‌ற்றும் த‌யிரை க‌ல‌க்கி சேர்த்து பிரட்டி விட‌வும்.

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு தீயின் அளவை குறைத்து வைத்து வேக விடவும்.

இந்த கலவை நன்கு வெந்து தண்ணீர் வற்றி கெட்டியாகி எண்ணெய் மேலே திரிந்து வரும், அடிப்பிடிக்காமல் அவ்வப்போது பார்த்து கொள்ளவும்.

அரிசி வடிக்க உலை போடவும். நல்ல அகலமானதாக கஞ்சி சிக்காத பெரிய சட்டியாக வைத்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் அரிசியை வடித்து தட்டவும். முக்கால் பதம் வெந்தால் போதும். இப்பொழுது அதில் எலுமிச்சையை பிழிந்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய கண் வடிகட்டியில் வடிக்கவும். ( பாசுமதி அரிசி வேகும் நேரம் ஏழுலிருந்து எட்டு நிமிடங்கள்)

உடனே வடித்த அரிசியை சிக்க‌ன் கலவையில் கொட்டி க‌ஞ்சி த‌ண்ணீர் கால் ட‌ம்ள‌ர் எடுத்து அதில் ரெட் க‌ல‌ர் பொடி சேர்த்து சாத‌த்தின் மீது வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌ ஊற்ற‌வும்.

அதில் நெய்யை ஊற்றி லேசாக‌ பிர‌ட்டி விட்டு, அதன் மேல் நல்ல பொருத்த‌மான‌ மூடியை போட்டு மூடவும். வ‌டித்து வைத்துள்ள‌ க‌ஞ்சி த‌ண்ணீரை மேலே வைக்கவும். பாத்திரத்திற்கு கீழே அடுப்பின் மேல் த‌ம் போடும் க‌ருவி (அ) தோசை த‌வ்வாவை வைத்து தம் போடவும்.

20 நிமிடம் தம்மில் போட்டு வைத்திருக்கவும். தம் போடும் போது தீயை குறைத்து வைத்து விடவும். ( 20 நிமிட‌த்தில் ப‌த்து நிமிட‌ம் க‌ழித்து ஒரு முறை லேசாக‌ எல்லா ப‌க்க‌மும் பிர‌ட்டி விட்டு ம‌றுப‌டியும் ப‌த்து நிமிட‌ம் த‌ம்மில் வைக்க‌வும்).

சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்:

பிரியாணியில் முக்கியமான‌ நேர‌ம் த‌ம் போடுவ‌து தான் வெந்த‌தும் ச‌ரியான‌ ப‌த‌த்தில் வ‌டித்து த‌ம் போட‌ வேண்டும். ம‌ற்ற‌ப‌டி எல்லாம் செய்வ‌து ரொம்ப‌ ஈசி. பிரியாணி என்றால் தீயை குறைத்து வைத்தே செய்வ‌தால் ம‌ற்ற‌ அனைத்து வேலையும் அந்த‌ நேர‌த்தில் முடித்து விட‌லாம். சிக்கன் பிரியாணிக்கு எலும்புடன் உள்ள துண்டுகள் போட்டால் தான் நல்ல இருக்கும் லெக் பீஸ் போட்டால் மசாலா ஏராது. சிலர் அதைப் போல் போடுவார்கள். அப்படி சரியாக கவனிக்காமல் அரிசி நன்கு வெந்து விட்டது என்றால் தம் போடும் நேரத்தின் அளவை குறைத்து 10 நிமிடம் வைத்து ஆஃப் பண்ணி விட்டு சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்து பிறகு இறக்கவும். இதற்கு கரம் மசாலாவோ , தனியாத்தூளோ, தேங்காயோ சேர்க்க தேவையில்லை. அவை எல்லாம் சேர்த்தால் சிக்கன் சால்னாவில் பிரியாணியை விர‌வியது போன்ற சுவை இருக்கும்.

இத‌னுடன் சேர்த்து சாப்பிட எண்ணெய் க‌த்திரிக்காய், த‌யிர் ச‌ட்னி, சிக்க‌ன் ப்ரை பொருத்தமாக இருக்கும்.