சிக்கன் பிரியாணி 2
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கிலோ
கோழி - முன்று முழு கோழி
தக்காளி - 600 கிராம்
வெங்காயம் - 600 கிராம்
இஞ்சி - 200 கிராம்
பூண்டு - 100 கிராம்
தயிர் - 20 மில்லி
கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
புதினா - அரை கட்டு
பச்சை மிள்காய் - 50 கிராம்
மிளகாய் தூள் - 50 கிராம்
எலுமிச்சை - இரண்டு
பட்டை - ஐந்து (இரண்டு அங்குல துண்டு)
கிராம்பு - 8
ஏலக்காய் - 5
எண்ணெய் - 250 மில்லி
டால்டா - 250 மில்லி
செய்முறை:
சிக்கனை கழுவி தண்ணீரை வடிக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்
முதலில் பெரிய பிரியாணி சட்டியை காய வைத்து அதில் எண்ணெய் + டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பை போட்டு வெடிக்கவிட்டு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி போட்டு வதக்கி மூடி போட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் பூண்டை போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.பிறகு கொத்தமல்லி, புதினா போட்டு இஞ்சியையும் போட்டு வதக்கவேண்டும். தாளித்தவை பொன்முறுவலாக இருக்க வேண்டும். நிறம் மாறியதும் தக்காளி பச்சைமிள்காயை போட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும். தக்காளி வதங்கியதும், உப்பு, மிளகாய் தூள் போட்டு நன்கு வேக விடவேண்டும். வெந்ததும் வடித்து வைத்துள்ள சிக்கனை போட்டு நன்கு மசாலா எல்லா இடத்திலும் சேருமாறு பிரட்டி தயிரையும் அடித்து ஊற்றி, ஒன்றரை எலுமிச்சைச்சாறு பிழிந்து விட்டு கிளறவும்.
இப்போது எல்லாம் நன்கு வெந்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை விடவும். எப்படியும் 20 நிமிடத்தில் வெந்து விடும். நல்ல பெரிய வாயகன்ற சட்டி 2 கிலோவிற்கும் பெரிய சட்டியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் கொதிக்கும் போது அரிசி சிக்காமல் உதிரியாக வரும்.
உலையை கொதிக்கவிட்டு ஊறவைத்துள்ள அரிசியை தண்ணீரை வடித்து போடவும்.
கொதித்து கொண்டிருக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெய், அரை எலுமிச்சை சாறு பிழிந்து ஊற்றி முக்கால் பதத்தில் பெரிய கண் வடிகட்டியில் வடித்து கிரேவியில் கொட்ட வேண்டும்.
சாதத்தை சமப்படுத்தி தம் போட வேண்டும். அடுப்பின் மேல் தோசை தவா (அ) தம் போடும் கருவி வைத்து சாதம் கலந்த கிரேவி சட்டி வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி தண்ணீரை அதன் மேல் ஏற்றி விடவேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து கலர் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றி தெளித்து லேசாக பிரட்டி மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விட வேண்டும்.
சுவையான கம கமன்னு மணக்கும் சிக்கன் பிரியாணி ரெடி