சிக்கன் சாப்பீஸ்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரைக் கிலோ
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
கறி மசாலா - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒன்றே கால் மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா நறுக்கியது - கால் கப்
கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி
தயிர் - அரை கப்
உப்பு - அரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
செய்முறை:
எலும்பு அதிகமில்லாத சதைப்பாகமா பார்த்து அரைக் கிலோ அளவிற்கு கோழிக்கறியினை எடுத்துக் கொள்ளவும். கால் எலும்பினை ஒட்டின சதைப்பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. சுமார் 12 துண்டங்கள் இருக்குமளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை சேர்த்து அரைத்த பொடியில் அரைத் தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இல்லையெனில் கரம் மசாலாப் பொடி எடுத்துக் கொள்ளவும். மற்ற பொடிகள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட அளவுகளில் எடுத்து தயாராய் வைத்துக் கொள்ளவும்.
புதினாவை காம்பு நீக்கி இலைகளாக எடுத்துக் கொள்ளவும். மல்லித்தழையை அடிக்காம்பு நீக்கி எடுத்துக் கொள்ளவும். பழுத்த நாட்டுத் தக்காளியாக தேர்வு செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சற்று நிறம் மாறும் வரை வதக்கவும்.
அதன் பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். தக்காளியை வதக்கும் போது மட்டும் தீயின் அளவை சற்று அதிகமாக்கிக் கொள்ளலாம்.
அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து கிளறிவிட்டு சில நொடிகள் வேக விடவும். பச்சை வாடை சற்று குறைந்தவுடன் எடுத்து வைத்துள்ள கொத்தமல்லியில் முக்கால் பாகத்தைச் சேர்க்கவும். விரும்பினால் சிறிது புதினா இலைகளையும் போடலாம். கிளறிவிட்டு வேகவிடவும்.
பின்னர் மிளகாய்த்தூள், கறிமசாலா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பிறகு அதில் உப்பு, தயிர் ஆகியவற்றையும் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகச் பிரட்டி விட்டு வேகவிடவும்.
சற்று நேரம் வெந்தவுடன் திக்கான குழம்பு போன்ற பதத்திற்கு வரும். அப்போது கோழிக்கறித் துண்டுகளைப் போடவும். தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிரட்டி விட்டு வாணலியை மூடி வைத்து சுமார் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.
இறக்குவதற்கு சற்று முன்பாக கரம் மசாலாப் பொடியைத் தூவவும். மசாலா நன்கு சுண்டி, கறியும் நன்கு வெந்தவுடன் மீதமுள்ள கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றை மேலேத் தூவி இறக்கவும்.
இப்போது சுவையான சிக்கன் சாப்பீஸ் தயார்.
குறிப்புகள்:
இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் கோழி உணவு தனிச்சுவை உடையது. இதில் கொடுக்கப்பட்டுள்ள கறி மசாலாவானது பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்து எடுக்கப்பட்டது. மிளகாய் சேர்த்து அரைப்பது கிடையாது. மிளகாய்த்தூள் தனியாக சேர்த்துக் கொள்ளவேண்டும். மல்லித்தூள் சேர்ப்பது இல்லை.