சிக்கன் குழம்பு இஸ்லாமிய முறை
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
கறி மசாலா - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - கால் கப்
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
தேங்காய் பூ - முக்கால் கப்
தயிர் - அரை கப்
பச்சை மிளகாய் - 5
முந்திரி - 5
எண்ணெய் - கால் கப்
உப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
மல்லித்தழை, புதினா இலைகள் - கால் கப்
செய்முறை:
கறி மசாலாத் தூள் செய்முறை : சீரகம் 250 கிராம், மிளகு 100 கிராம், சோம்பு 100 கிராம், ஏலக்காய் 10 கிராம், கிராம்பு 15 கிராம், பட்டை 25 கிராம் எடுத்துக் கொள்ளவும். சீரகம், சோம்பு, மிளகு மூன்றையும் காய வைத்து எடுத்து மற்றப் பொருட்களுடன் சேர்த்து இயந்திரத்தில் அரைத்துக் கொள்ளவும்.
சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு எல்லாம் ஒன்று சேரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.
சற்று குழம்பு போல் வந்தவுடன் அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு பிரட்டி விடவும்.
அத்துடன் கறி மசாலா, தயிர், உப்பு அனைத்தையும் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
கடைசியாக மல்லித்தூளைக் கொட்டி கிளறி விட்டு, மூடி வைத்து வேகவிடவும்.
சுமார் 8 நிமிடங்கள் கழித்து, கறி வெந்து, குழம்பு நன்றாக கொதித்து வரும் போது அரைத்த தேங்காய் விழுதினைப் போட்டு கிளறி விட்டு, அடுப்பின் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடம் வேகவிடவும்.
இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லித் தழை தூவவும். சுவையான இஸ்லாமிய இல்லத்து சிக்கன் குழம்பு ரெடி.