கோழிக் குழம்பும் வறுவலும்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

<b>குழம்பிற்கு</b>

கோழி - அரை கிலோ

பெரிய வெங்காயம் - கால் கிலோ

தக்காளி - 3

இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

தயிர் - அரை கப்

கறிவேப்பிலை - சிறிது

ரம்பை இலை - சிறிது

மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி

சீரகத்தூள் - அரைத் தேக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

முருங்கைகாய் - 1

உப்பு - தேவையான அளவு

எண்ணெய், நெய் - 3 கரண்டி

தேங்காய் - கால் மூடி

கசகசா - 2 தேக்கரண்டி

முந்திரி - 6

----வறுவலுக்கு-----

சிக்கன் - அரை கிலோ

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

முட்டை - 2

பெரிய வெங்காயம் - ஒன்று

தயிர் - அரை கப்

மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி

சிகப்பு கேசரி கலர் - ஒரு சிட்டிகை

மைதா மாவு - 100 கிராம்

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - ஒன்று

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை சிறுசிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை இரண்டு அங்குல துண்டுகளாக நறுக்கவும்.

கசகசாவை முதலில் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்து பின்னர் துருவின தேங்காய், முந்திரி சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதுடன் மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாதூள், மஞ்சள்தூள் என எல்லாத்தூள்களையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு கலக்கி வைக்கவும்.

குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பின்னர் நறுக்கின தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, ரம்பை இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். தயிர் ஊற்றவும்.

பின்னர் அதில் கோழித்துண்டங்களைப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். விசில் போடாமல், குக்கரை மூடி வைத்து ஒரு கொதி வரும் வரை வேகவிடவும்.

பின்னர் குக்கரை திறந்து, மசாலாத்தூள் கலந்து வைத்துள்ள அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து கிளறிவிட்டு உப்பு, முருங்கைக்காய் துண்டங்களை போட்டு மூடி வைத்து வேகவிடவும். ஒரு விசில் வரும்வரை அதிக தணலில் வைத்து, விசிலுக்கு பின்னர் குறைந்த தணலில் சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

அதிக நேரம் வேகவிட்டால் முருங்கைக்காய் குழைந்துவிடும். 10 நிமிடத்தில் இறக்கி விடவும். இப்போது சுவையான முருங்கைக்காய் கோழிக் குழம்பு தயார்.

சிக்கனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், முட்டை, கலர் பவுடர், கரம் மசாலா, உப்பு, மைதா, அரை மூடி எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் எண்ணெய் கலந்து நன்றாக விரவி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான சிக்கன் வறுவல் தயார்.

குறிப்புகள்:

சிக்கனை சாப்பிடப்போகும் நேரத்தில் வறுத்து எடுக்கவும். பொரித்த உடன் சாப்பிட்டால்தான் மிகவும் சுவையாக இருக்கும்.