கோடா கஞ்சி
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 300 கிராம்
தேங்காய் - ஒன்று
முந்திரி - 10
கிஸ்மிஸ் - 10
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 3
ஏலம் - 3
சீனி - 400 கிராம்
நெய் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மைதாமாவை சலித்துக் கொள்ளவும். அதில் ஒரு மேசைக்கரண்டி தனியாக எடுத்து வைக்கவும்.
பாக்கி மாவில் சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவைப் போல் பிசையவும். பின்பு பூரி கட்டையால் மெல்லிதாக தேய்க்கவும்.
பின்பு 2 அங்குல சதுரங்களாக கத்தியால் கீறவும். அதன் பின்பு சதுரத்தின் நடுவே இரண்டு விரல்களால் கிள்ளி திருகவும். இப்பொழுது பூவைப்போல் காணப்படும்.
இவற்றை நல்ல வெயிலில் ஒரு மணி நேரம் காய வைக்கவும். தேங்காயை துருவி முதல் பால் தனியாக எடுத்து கொள்ளவும். மறுபாலை ஒரு லிட்டர் போல் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டாவது எடுத்த பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பின்பு அதில் காய வைத்திருக்கும் கோடாக்களை போட்டு வேக விடவும்.
வெந்தப்பின்பு அதில் சீனியை சேர்க்கவும். சுவையை கூட்ட சிறிது உப்பு சேர்க்கவும். பிறகு அதில் முதலில் எடுத்த பாலை சேர்த்து கொதி வந்த பின்பு இன்னொரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம், முந்திரி, திராட்சை ஆகியவற்றை சிவக்க வறுத்து கொட்டவும்.
கடைசியாக எடுத்து வைத்துள்ள மைதா மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதித்த பின்பு இறக்கவும்.