கொலுஷா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - ஒன்றரை + அரை கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

தயிர் - 2 மேசைக்கரண்டி

உப்பு - கால் தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

மைதா மாவுடன் அரை கப் சர்க்கரை, நெய், தயிர், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்குப் பிசைந்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.

பிசைந்த மாவு இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக்கி, பூரிப் போல் தேய்த்துக் கொள்ளவும்.

மூன்று பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்து அடுக்கி ஓரங்களை நன்கு அழுத்தி விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பூரிகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றறை கப் சர்க்கரையை போட்டு 200 மி.லி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பொரித்து எடுத்து வைத்திருக்கும் பூரியை பாகில் போட்டு மூன்று, நான்கு நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் எடுத்துப் பரிமாறவும்.

இனிப்பான கொலுஷா ரெடி.

குறிப்புகள்:

சர்க்கரை சேர்த்து பிசைவதால் சீக்கிரம் கருகிவிடும் வாய்ப்பு அதிகம், மிதமான தீயிலேயே பொரித்தால் தான் பூரியின் உள்பகுதியும் வேகும்.

பரிமாறும் போது நட்ஸ் வகைகள், ட்ரை ப்ரூட்ஸ் மேலே தூவி பரிமாறலாம். மிதமான இனிப்பு விருப்பம் உள்ளவர்கள் பாகு காய்ச்சும்போது சர்க்கரையின் அளவை குறைத்து செய்யலாம்.