கூவே
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
தேங்காய் - 2
சர்க்கரை - 2 கப்
முட்டை - 3
பன்னீர் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
தேங்காயைத் துருவி பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சர்க்கரையைக் கலந்து மிக்ஸியில் போட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை அடித்து எடுத்துக் கொள்ளவும்.
மைதா மாவு, தேங்காய்பால், முட்டை சர்க்கரை கலவை, பன்னீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் பதத்தில் கலக்கி வைத்துக் கொண்டு, இரண்டு பாத்திரத்தில் பாதி பாதி ஊற்றவும்.
ஒரு மாவை வெள்ளையாகவே வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் இருக்கும் மாவிற்கு விரும்பும் வண்ணப் பொடியைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஓவன் ட்ரேயில் சிறிது நெய் தடவி கலர் மாவை இரண்டு கரண்டி ஊற்றி ஓவனில் வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து வெளியில் எடுத்து வெள்ளை மாவு இரண்டு கரண்டி அதன் மீது ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடம் வேகவைக்கவும்.
இதேபோல் மீண்டும் மாற்றி மாற்றி வெள்ளை மாவையும் கலர் மாவையும் ஊற்றவும்.
வெந்தபின் வெளியில் எடுத்து ஆறியபிறகு டைமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
இதனை மூன்று நான்கு வண்ணங்களில் கூடச் செய்யலாம். அதற்கு தகுந்தாற்போல் மாவினைப் பிரித்து வண்ணப்பொடியினை சேர்த்துக் கொள்ளவும்.
ஓவன் இல்லாதவர்கள் குக்கரில் தண்ணீர் வைத்து குக்கர் பாத்திரத்தில் இதேபோல் செய்யவும். குக்கரில் வெயிட் போடக்கூடாது.