குஜராத்தி சீஸ் போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மக்ரோனி ட்யூப்கள் - ஒரு கப்

எலும்பு நீக்கிய கோழிக்கறி - ஒரு கப்

உருளைக்கிழங்கு - 150 கிராம்

துருவிய சீஸ் - ஒரு கப்

முட்டை - 2

இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

மிளகுத் தூள் - 2 மேசைக்கரண்டி

ரஸ்க் தூள் - 2 கப்

உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.

மக்ரோனி மற்றும் உருளைக்கிழங்கைத் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

எலும்பு நீக்கிய கோழிக் கறியை தூள் வகைகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.

முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி, பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு அடித்துக் கொள்ளவும்.

வேக வைத்த மக்ரோனி மற்றும் உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.

மசித்த கலவையுடன் வேக வைத்த கோழிக் கறி மற்றும் துருவிய சீஸை சேர்க்கவும்.

இவையனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, கலக்கிய முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் பிரட்டியெடுத்து ஃப்ரீசரில் சுமார் 4 மணி நேரம் வைக்கவும்.

பிறகு ஃப்ரீசரிலிருந்து எடுத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான குஜராத்தி சீஸ் போண்டா தயார். கறி சாஸ் அல்லது கெட்சப்புடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

பொரிக்கும் போது எண்ணெய் போதுமான சூடு இல்லாவிட்டால் உருண்டைகள் வெடித்து தனித்தனியாக சிதறிப் போகலாம். அதனால் நல்ல சூட்டில் பொரிக்கவும்.