கீமா நோன்பு கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி நொய் - 150 கிராம்

பாசிபருப்பு – 50 கிராம்

மட்டன் கீமா – 200 கிராம்

வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 50 கிராம்

கேரட் – ஒன்று

கேபேஜ்(முட்டைகோஸ்) – கால் கப்

பேபி கார்ன் – இரண்டு

இஞ்சி பூண்டு விழுது – இரண்டு மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் – ஒன்று

கொத்தமல்லி – கால் கட்டு

புதினா - எட்டு இதழ்கள்

தேங்காய் – அரை மூடி

எண்ணெய் – 25 கிராம்

நெய் - ஒரு மேசைக்கரண்டி

பட்டை – சிறிது

கிராம்பு – இரண்டு

ஏலம் – இரண்டு

மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவைக்கு

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

மட்டன் கீமாவை சுத்தம் செய்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். காய்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாயை ஆய்ந்து அலசி வைக்கவும். பாசி பருப்பை லேசாக வறுத்து அதில் அரிசி நொய்யை சேர்த்து களைந்து ஊற வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை அலசி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அதனுடன் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கவும்.

வதக்கி வைத்துள்ள கீமாவை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பச்சைமிளகாய், கேரட், முட்டைகோஸ், பேபி கார்ன் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கி 5 நிமிடம் வேக விடவும்.

5 நிமிடங்கள் கழித்து ஊற வைத்திருக்கும் நொய் மற்றும் பருப்பை சேர்த்து கிளறி விடவும்.

எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக கிளறிய பின்னர் தீயை குறைத்து வைத்து மீண்டும் 5 நிமிடம் வேக விடவும்.

அதன் பிறகு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து மூடி போட்டு தீயை மிதமாக வைத்து இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

தேங்காயை அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். அதை கஞ்சியுடன் ஊற்றி கலந்து விடவும். தேங்காய் பவுடரை கரைத்தும் ஊற்றலாம்.

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் வதக்கியவற்றை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

குறிப்புகள்:

நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் பல வகை கஞ்சிகளில் இதுவும் ஒரு வகையாகும். பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்தும் செய்யலாம். குக்கரில் செய்வதால் அதிக தீயில் செய்யக்கூடாது. ப்ரஷர் அடங்கியதும் உடனே திறந்து நன்கு கட்டி பிடிக்காமல் கிளறி விடவும்.