காய்கறி அச்சாறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நாட்டு வெங்காயம் - கால் கிலோ

கேரட் - 150 கிராம்

பப்பாளிக்காய் - 150 கிராம்

பச்சை மிளகாய் - 15

மலைப்பூண்டு - 50 கிராம்

காடி அல்லது வினிகர் - 750 மில்லி

காய்ந்த மிளகாய் - 10

கடுகு - ஒரு டீஸ்பூன்

வெந்தயம் - 3/4 டீஸ்பூன்

உப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் நாட்டு வெங்காயத்தை தோல் உரித்து, அடி, நுனி பாகங்களை நீக்கிவிட்டு கூர்மையான கத்தியால் (துண்டாகாமல்) சற்று ஆழமாக கீறிவிடவும்.

கேரட்டை தோல் நீக்கி, மெல்லிய குச்சிபோல் சுமார் 2 இன்ச் நீளத்தில் வெட்டிக்கொள்ளவும்.

பப்பாளிக்காயை சற்று செங்காயாக, ஆனால் பழுத்துவிடாத பதத்தில் உள்ளதை வாங்கி, தோல் நீக்கிவிட்டு 2 இன்ச் நீளத்தில் மெல்லிய துண்டுகளாக போட்டுக்கொள்ளவும்.

மலைப்பூண்டை தோல் உரித்துவிட்டு, நீளவாக்கில் இரண்டாக பிளந்து வைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

இவையனைத்தையும் தயார் பண்ணிய பிறகு, சுத்தமான ஒரு துணியில் போட்டு, நிழலில் ஈரம் காயும்வரை மட்டும் உலர்த்தவும்.

அது உலர்வதற்குள், அதற்கான மசாலாப்பொடியை தயார்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தை சூடாக்கி, கடுகை வெடிக்கவிட்டு எடுத்துக்கொள்ளவும். பிறகு வெந்தயத்தை பொன்முறுவலாக வறுத்துக்கொள்ளவும்.

கடைசியாக காய்ந்த மிளகாயையும் பச்சை வாடை மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.

இவையனைத்தையும் சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

ஈரமில்லாத, நன்கு காய்ந்த ஒரு கண்ணாடி பாட்டிலில், நிழலில் உலர்த்திய காய்கறிகளை கலந்தாற்போல் போடவும்.

அத்துடன் பொடித்து வைத்துள்ள மசாலாவையும் உப்பையும் சேர்க்கவும்.

காடி அல்லது (அது கிடைக்காவிட்டால்) வினிகரை அதன் மேல் ஊற்றி, பாட்டிலை மூடி, மேலும் கீழுமாக நன்கு குலுக்கி, அப்படியே சுமார் ஒரு வாரத்திற்கு வைத்துவிடவும்.

தினமும் அதுபோல் குலுக்கிவிட்டு வைக்கவும். காய்கறிகள் சற்று கலர் மாறி, மசாலாவும் அதனுடன் செட் ஆனவுடன் காய்ந்த ஸ்பூன் கொண்டு எடுத்து சாப்பிடலாம்.

ஈரம் படாமல் பக்குவமாக வைத்திருந்தால், மாதக்கணக்கில் இது கெடாமல் இருக்கும்.

குறிப்புகள்: