கத்திரிக்காய் இறால் குருமா
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 4
இறால் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - அரை கப்
கறி மசாலா - அரை மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
செய்முறை:
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயின் காம்பை நீக்கி விட்டு நான்கு துண்டுகளாக நறுக்கி அதை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். இறாலின் தலையை நீக்கி தோல் உரித்து சுத்தம் செய்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவக்கில் கீறி கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மசாலாத் தூள்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய கத்திரிக்காயை போட்டு 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு மீதமான தீயில் மூடி வைத்து 8 நிமிடம் வேக விடவும்.
8 நிமிடம் கழித்து மூடியை திறக்கவும். கத்திரிக்காயின் தோல் சுருங்கி, நிறம் மாறி இருக்கும். அதனை ஒரு தட்டில் எடுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கின பெரிய வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் நறுக்கின தக்காளி, கீறி வைத்திருக்கும் பச்சை மிளகாய் போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு அதனுடன் சுத்தம் செய்த இறாலை போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
இறாலை போட்டு நன்கு பிரட்டிய பிறகு அதில் கறி மசாலா தூளை போட்டு 2 நிமிடம் பிரட்டவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் விழுதுடன் கொத்தமல்லி தூள் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் கரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை ஊற்றி, அதனுடன் வதக்கி எடுத்து வைத்திருக்கும் கத்திரிக்காயை போடவும்.
பிறகு ஒரு முறை குருமாவை கிளறி விட்டு 5 நிமிடம் மூடி விடவும். 5 நிமிடம் கழித்து திறந்து குருமா கொதித்து கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லித் தழை, புதினா இரண்டையும் தூவி இறக்கவும்.
கத்திரிக்காய் இறால் குருமா ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இறால் விரும்பாதவர் இதையே இறால் சேர்க்காமலும் செய்யலாம். மீல்மேக்கர் (சோயா பால்ஸ்) சேர்த்து சற்று வித்தியாசமான வெஜ் கிரேவியாக இதை செய்யலாம்.