இறால் சேப்பங்கிழங்கு புளி குழம்பு
தேவையான பொருட்கள்:
இறால் - கால் கிலோ
சேப்பங்கிழங்கு - ஐந்து கிழங்கு
புளி - எலுமிச்சை அளவு (அ) இரண்டு மேசைக்கரண்டி புளி பேஸ்ட்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
வெந்தய பொடி - கால் தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பூண்டு - நான்கு பல் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - அரை கைப் பிடி
கொத்தமல்லி - சிறிது
தேங்காய் பால் - ஒரு டம்ளர்
செய்முறை:
முதலில் சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் வேக வைத்து தோலுரித்து நான்காக கட் செய்து வைக்க வேண்டும்.
இறாலை சுத்தம் செய்து முதுகிலும், வயிற்றிலும் உள்ள அழுக்கை கத்தியால் கீறி எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
தக்காளியை அரைத்து வைக்க வேண்டும்.
சட்டியை காய வைத்து எண்ணெய், கடுகு போட்டு தாளித்து பூண்டை பொடியாக நறுக்கி போட்டு முந்திரி போல் வதக்கவும் பொன்னிறமாக, பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து அதே எண்ணெயில் எல்லா மசாலா தூள்களையும் போட்டு நன்கு வதக்கி அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி மூடி போட்டு இரண்டு நிமிடம் விடவும்.
பிறகு புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும் (அ) புளி பேஸ்ட் போடவும்.
பிறகு வடித்து வைத்துள்ள இறாலை மூன்றாக நறுக்கி போடலாம் இல்லை அப்படியேவும் போடலாம். போட்டு மேலும் கொதிக்க விடவும்.
கடைசியில் வேக வைத்துள்ள சேப்பங்கிழங்கு, தேங்காய் பால், கொத்தமல்லி தழை எல்லாம் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.