இனிப்பு சோமாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பில்லிங்:

கருப்பு எள் - ஒரு மேசைக்கரண்டி (வறுத்தது)

வெள்ளை எள் - இரண்டு மேசைக்கரண்டி (வறுத்தது)

தேங்காய் - அரை முடி (துருவிய‌து)

ச‌ர்க்க‌ரை - முக்கால் ட‌ம்ள‌ர்

நெய் - ஒரு தேக்க‌ர‌ண்டி

முந்திரி, பாதாம் - த‌லா ஐந்து ( பொடியாக‌ நறுக்கிக் கொள்ள‌வும்)

மாவு த‌யாரிக்க‌:

மைதா மாவு - கால் கிலோ

ர‌வை - ஐம்ப‌து கிராம்

இட்லி சோடா - சிறிது

உப்பு - தேவைக்கு

டால்டா (அ) ப‌ட்ட‌ர் - இர‌ண்டு மேசைக்க‌ர‌ண்டி

செய்முறை:

மேலே குறிப்பிட்டிருக்கும் தேவையான‌ பொருட்க‌ளை தயாராக‌ வைத்து கொள்ள‌வும்.

ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு அதில் ரவை, இட்லி சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து டால்டாவை உருக்கி ஊற்றி நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் போட்டு வறுத்து விட்டு வெள்ளை எள் மற்றும் கருப்பு எள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக சர்க்கரையை சேர்த்து வதக்கி இறக்கவும்.

கலவை சற்று கெட்டியாக இருக்கும், எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்த்து அதை எடுத்து சோமாஸ் செய்யும் அச்சியில் வைத்து அதனுள் செய்து வைத்திருக்கும் பில்லிங்கை வைத்து மூடி வைக்கவும்.

எல்லாவற்றையும் இதே போல் சோமாஸ்களாக செய்து வைத்துக் கொள்ளவும். சிலவற்றை மட்டும் குழந்தைகள் விரும்புவது போல் சிறிய சோமாஸாக செய்துக் கொள்ளவும். தட்டில் ஒட்டாமல் இருக்க மாவு தூவி அடுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து செய்து வைத்திருக்கும் சோமாஸை போட்டு பொரித்து எடுக்கவும். இரு புறமும் திருப்பி விட்டு நன்கு பொரிந்ததும் கருகவிடாமல் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

இது இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌த்தில் நோன்பு திற‌க்க‌ செய்யும் ப‌ல‌ வ‌கை வ‌டை ப‌ஜ்ஜி வகைகளில் இது ஒரு ஸ்பெஷ‌ல் பதார்த்தம் ஆகும். எள்ளை க‌ல்லெடுத்து வ‌டித்து வ‌றுத்து கொள்ள‌வும், வறுக்கும் போது ப‌டப்ப‌ட‌வென்று தெரிக்கும், ச‌ட்டியை சூடாக்கி வ‌றுத்து உட‌னே அடுப்பை அனைத்து மூடி போட்டு விட‌வும். நிறைய‌ செய்து ஃப்ரீச‌ரில் வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது, பொரிப்ப‌த‌ற்கு அரை ம‌ணி நேர‌ம் முன்பு எடுத்து வைத்து பொரிக்கலாம். இதை நெய்யில் வ‌த‌க்காம‌ல் அப்படியே ப்ரெஷ் தேங்காயில் ச‌ர்க்க‌ரை ம‌ற்றும் எள்ளை க‌ல‌ந்தும் வைக்க‌லாம். ஆனால் பில்லிங் ச‌ரியாக‌ மூட‌னும் இல்லை என்றால் எண்ணெயில் உதிரும். இத‌ற்கு க‌ச‌க‌சா கிடைத்தால் அதை வைக்க‌லாம், சுவை ந‌ன்றாக‌ இருக்கும்.இதில் உருளைக்கிழ‌ங்கு ஹ‌ல்வா ம‌ற்றும் கேர‌ட் ஹ‌ல்வாவும் பில்லிங்காக‌ வைக்கலாம்.