ஆப்ப ஆணம்
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - 50 கிராம் (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - 50 மி.லி
பட்டை - சிறு துண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
ப்ரஷர் குக்கரில் கடலைப் பருப்புடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.
கிழங்கு மற்றும் பருப்பு வெந்ததும் குக்கரை திறந்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும்.
பின்னர் மசித்த கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு கலவையை சேர்த்து கிளறவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ருசிக்கேற்ப உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கலவை கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு கரம் மசாலாத் தூள், கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான ஆப்ப ஆணம் தயார்.
குறிப்புகள்:
கடலைப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை பதமாக மசித்தால் ஆணத்திற்கு இன்னும் சுவையைக் கூட்ட உதவும்.