7 கப் கேக்
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 3/4 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
பால் - 1 கப்
சீனி - 3 கப்
நெய் - 1 கப்
முந்திரித்தூள் - 1/4 கப்
செய்முறை:
கடலை மாவை சலித்து சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி, ஓடு, நார் இல்லாமல் வெண்மையான பூவாக எடுத்துக் கொள்ளவும்.
முந்திரியை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த கடலை மாவு, அரைத்த முந்திரி பொடியை போட்டு ஒன்றாய் கலந்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் பாலை ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற, அடி சற்று கனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடேற்றவும். அதில் கரைத்த கடலை மாவு கலவையை ஊற்றவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல், சீனி சேர்த்து நன்கு கிளறவும்.
சீனி கரைந்து பாகாகி, மாவு மற்றும் தேங்காயுடன் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது விடாது கிளறிவிடவும்.
20 நிமிடங்கள் தொடர்ந்து கிளறியவுடன், கலவை எல்லாம் ஒன்று சேர்ந்து சற்று கெட்டியாகி வரும். நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
ஒரு தட்டின் உட்புறம் முழுவதும் நெய் தடவி வைக்கவும்.
இறக்கியவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி நன்கு பரப்பி சற்று ஆறவிடவும். 3 நிமிடம் கழித்து கத்தியில் நெய் தடவிக் கொண்டு வில்லைகளாக வெட்டி வைக்கவும்.