வெல்ல கொழுக்கட்டை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு:

அரிசி மாவு - 1 கப்

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

பால் - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

பூரணத்திற்கு:

தேங்காய்த்துருவல் - 1 கப்

பொடித்த வெல்லம் - 1/4 கப்

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசிமாவை நன்கு சலித்துக் கொள்ளவும். நல்ல நைஸாக இருக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கால் கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதில் எண்ணெய், உப்பு, பால் சேர்த்து கொதித்ததும், அதில் கரைத்த அரிசிமாவை விட்டுக் கிளறவும்.

மாவு கெட்டியாகி, கட்டி இல்லாமல் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும். அதில் இருக்கும் சூட்டுக்கு உள்ளே நன்கு வெந்துக் கொள்ளும். ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.

தேங்காய் துருவலையும், வெல்லத்தையும் சேர்த்து வாணலியில் போட்டு கிளறவும்.

இரண்டும் சேர்ந்து பூரண பதம் வந்ததும் அதில் ஏலப்பொடி சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கவும்.

மாவையும் சிறு உருண்டையாக்கி, உள்ளங்கையில் வைத்து சிறிய கப் போல செய்யவும்.

அதனுள் உருட்டி வைத்திருக்கும் பூரணம் வைத்து அழகாக மூடவும்.

இதுப் போல் செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

கொழுக்கட்டை மாவு கிளறுவது ஒரு சிரமமான விஷயம். புதிதாக சமைப்பவர்களுக்கு சரியாக வராது. வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் மாவை அப்படியே போடும் போது கட்டி தட்டி விடும். சரியாக கப் செய்ய வராது. நான் எழுதியுள்ள முறை மிக சுலபமானது. மேல்மாவு அதிகமாகிவிட்டதா? கவலையே வேண்டாம், அதற்கு ஒரு ஐடியா இருக்கு அடுத்த ரெசிபியில் சொல்றேன் (மண்ணாங்கட்டி)