மொச்சை அல்வா
தேவையான பொருட்கள்:
பச்சை மொச்சை - 1 கப்
வெல்லத் தூள் - 1 கப்
வெள்ளை எள்ளு - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3
தேங்காய் துருவல் - 1/4 கப்
பால் - 1 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்துக் கொள்ளவும். வெல்லத்தை தூள் செய்துக் கொள்ளவும். எள்ளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மொச்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் பால் ஊற்றி அதில் உரித்து வைத்திருக்கும் மொச்சையை போட்டு குக்கரில் வைத்து மூடி வெய்ட் போட்டு 10 நிமிடம் நன்கு குழைய வேக விடவும்.
10 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் தேங்காய் துருவலை போட்டு ஈரப்பதம் போகும் வரை ஒரு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சுத்தம் செய்த எள்ளை போட்டு 2 நிமிடம் பொரியும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் பாலை ஊற்றி அதில் மசித்து வைத்திருக்கும் மொச்சையை போட்டு அதனுடன் வெல்லத்தூள், உப்பு போட்டு 4 நிமிடம் கிளறி விடவும்.
மிக்ஸியில் முதலில் எள்ளை போட்டு பொடி செய்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு ஒரு முறை அரைத்து எடுக்கவும்.
அதை அல்வாவுடன் சேர்த்து 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
நன்கு திரண்டு வரும் போது நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
அலங்கரிக்க பாதாமை நெய்யில் வறுத்து அல்வாவில் தூவவும்.