மைதா ரிப்பன் பிஸ்கட்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1/4 கிலோ
சீனி - 25 கிராம்
தேங்காய் எண்ணெய் - 25 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
டால்டா - 25 கிராம்
செய்முறை:
மைதா மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய், டால்டா இரண்டையும் தனித்தனியாக சூடுப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அல்லது கிண்ணத்தில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி சீனி மற்றும் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவை போட்டு அதில் சூடுப்படுத்தி வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். அதில் கலந்து வைத்திருக்கும் சீனி கலவையை ஊற்றவும்.
எல்லாவற்றையும் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொண்டு நன்கு மிருதுவாகும் வரை சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு சாத்துக்குடி அளவு மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும். அதை நீளவாக்கில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கின அந்த மூன்று துண்டுகளையும் இரண்டிரண்டு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அந்த தனித்தனித் துண்டுகளிலும் நடுவில் மூன்று கோடுகள் போட்டுக் கொள்ளவும்.
பின்னர் நடுவில் இருக்கும் துளையை சற்று பெரிதுப்படுத்தி அதன் வழியாக மேலே இருக்கும் இரண்டு முனைகளையும் விட்டு அடிவழியாக இழுக்கவும்.
இதைப் போல் மீதமிருக்கும் மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் பிஸ்கட்டுகளை போட்டு 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.