முந்திரி பாதாம் புட்டிங்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

முந்திரி - 12

பாதாம் - 12

சீனி - 3/4 கப்

பால் - 1/2 லிட்டர்

கசகசா - 2 மேசைக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - 4 துளி

செய்முறை:

தேவையானப் பொருட்களை எடுத்து தயாராய் வைத்துக் கொள்ளவும். அரை லிட்டர் பாலை 200 மில்லி அளவிற்கு வருமளவிற்கு நன்கு சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும். பாதாம் பருப்பையும், கசகசாவையும் வெந்நீரில் தனித்தனியாக ஒரு நிமிடம் ஊற வைத்து பாதாமை தோல் உரித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் ஊற வைத்த பாதாம் பருப்பு, முந்திரி, கசகசா போட்டு மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கோப்பையில் மூன்று முட்டைகளையும் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.

முட்டைகளை இயந்திரக் கலக்கி (Blending machine) அல்லது கையால் கலக்கும் கலக்கிக் கொண்டு நன்கு கலக்கவும். இரண்டு நிமிடங்கள் விடாது கலக்கவும்.

முட்டை மஞ்சள் கரு நன்கு கலந்து, மிருதுவாக வரும் வரை கலக்கி, பிறகு அதில் சீனியைக் கொட்டவும்.

இந்த புட்டிங் தயாரிப்பில் கலக்குவதுதான் முக்கியமான பகுதி. சீனி சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும். எல்லாம் கலந்து சற்று வெண்மை நிறத்தில் வரும்.

அரைத்த கலவையை முட்டையுடன் சேர்த்து, அதில் காய்ச்சின பாலை ஊற்றி மேலும் 3 நிமிடங்கள் கலக்கவும். இது இயந்திரத்தில் கலக்குவதற்கான கால அளவு. கையால் கலக்கும் போது சற்று கூடுதல் நேரம் கலக்கவும்.

பிறகு அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து, நன்கு நுரை வரும் அளவிற்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தின் அடியில் நெய் தடவி, அதில் முட்டைக் கலவையை ஊற்றவும். பிறகு அந்த பாத்திரத்தை ஒரு எலக்ட்ரிக் குக்கர் அல்லது சாதா குக்கரில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.

சில நிமிடங்கள் கழிந்து வெந்தது பார்த்து இறக்கவும். எலக்ட்ரிக் குக்கர் என்றால் மேலே உள்ள கண்ணாடியின் வழியாகவே வெந்ததை பார்த்து இறக்கலாம். சாதாரணக் குக்கரில் செய்தீர்கள் என்றால் ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும்.

விரும்பிய வடிவங்களில் துண்டு போட்டு எடுத்து, மேலே முந்திரி, பாதாம் வைத்து அலங்கரிக்கவும்.

குறிப்புகள்:

இதனைச் செய்வதற்கு அதிகபட்சம் 30 நிமிடங்கள் ஆகும்.

சுமார் நான்கு பேர் சாப்பிடுவதற்கான அளவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.