ப்ரெட் அல்வா (2)
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 1 பாக்கெட்
நெய் - 150 கிராம்
முந்திரி - 10
சீனி - 150 கிராம்
திராட்சை - 10 கிராம்
ஏலக்காய் - 4
கலர் பவுடர் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
ப்ரெட்டை பிய்த்து சிறு சிறுத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். ப்ரெட்டின் ஓரங்கள் பிடிக்காதவர்கள் அதை நீக்கி விட்டு ப்ரெட்டின் மிருதுவான நடுப்பகுதியை சேர்த்து செய்யலாம். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிய்த்து வைத்திருக்கும் ப்ரெட் துண்டுகளை போட்டு பிரட்டவும். பிறகு ப்ரெட் துண்டுகளில் நெய் முழுவதும் பரவும்படி நன்கு 2 நிமிடம் பிரட்டி விடவும்.
2 நிமிடம் கழித்து ப்ரெட் முழுவதும் நெய் பரவியதும் தீயை குறைத்து வைத்து சீனி மற்றும் கலர் பவுடரை போட்டு ஒரு முறை பிரட்டி விடவும்.
பிறகு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கிளறி விடவும்.
ப்ரெட் நன்கு மசியும்படி கரண்டியால் அழுத்தி விட்டு கிளறவும். பிறகு ப்ரெட் மசிந்து வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்தில் திரண்டு வரும்.
அல்வா பதத்தில் திரண்டு நெய் வெளியே வரும் சமயத்தில் நடுவில் ஒரு குழி போல் செய்து அதில் தேங்கி நிற்கும் நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து கிளறி விடவும். முந்திரி திராட்சையை தனியாக வறுத்தும் சேர்க்கலாம்.
பிறகு பொடி செய்து வைத்திருக்கும் ஏலாக்காயை போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி விடவும். சட்டியில் ஒட்டாமல் நன்கு திரண்டு அல்வா பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.